search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் பலி - ரத்த மாதிரிகள் ஆய்வு
    X

    கேரளாவில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் பலி - ரத்த மாதிரிகள் ஆய்வு

    நிபா காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில் 2 பெண்கள் மர்ம காய்ச்சலால் பலியான சம்பவம் கேரளாவில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நிபா காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கேரள அரசு உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    இந்தநிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் கடுமையாக காய்ச்சலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் இறந்ததாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்வதற்காக அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதேபோல மலப்புரத்திலும் காய்ச்சலால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவர் நிபா காய்ச்சலால் பலியாகவில்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்? என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    நிபா காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில் 2 பெண்கள் மர்ம காய்ச்சலால் பலியான சம்பவம் கேரளாவில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு நிபா காய்ச்சல் கேரளாவை தாக்கியபோது கடுமையாக போரிட்டு அதனை வென்றோம். அதேபோல் இப்போதும் விரட்டி அடிப்போம். எனவே பொதுமக்கள் நிபா காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிபா வைரஸ் தடுப்பு மருந்துகள் ஆஸ்திரேலியாவில் இருந்து கேரளாவுக்கு இன்று வந்து சேர்ந்துள்ளன. இதன் மூலம் நிபா காய்ச்சல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    Next Story
    ×