search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்
    X

    பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்

    பாராளுமன்றத்தில் இன்று நிதித்துறை மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். #Budget2019 #BudgetSession #PiyushGoyal
    புதுடெல்லி:

    நமது நாட்டில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் முழு பட்ஜெட் அல்ல, இடைக்கால பட்ஜெட் என உறுதி செய்யப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    இந்நிலையில் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    நிதி மந்திரி பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டு, அவர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.



    பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், சர்ச்சைக்கு இடம் அளிக்காத மசோதாக்களை மட்டுமே பட்ஜெட் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 10 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கேள்வி நேரம் நடைபெற உள்ளது. 8-ம் தேதி தனிநபர் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தில் கடைசி இடைக்கால பட்ஜெட், 2014ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. #Budget2019 #BudgetSession #PiyushGoyal
    Next Story
    ×