search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக
    X

    மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும், காங்கிரசை விட அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. #MadhyaPradeshElections2018 #BJPVoteBank
    இந்தூர்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்த பாஜக, 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட 5 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

    தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்சியமைக்க இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.



    இந்த மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்தபோதும் வாக்குகள் அடிப்படையில் காங்கிரசை முந்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்குகள் (40.9 சதவீதம்) பெற்றுள்ளது. பாஜக 1 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 வாக்குகள் (41 சதவீதம்) பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 5.8 சதவீதம், அதாவது 22 லட்சத்து 18 ஆயிரத்து 230 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றுள்ளது. #MadhyaPradeshElections2018 #BJPVoteBank

    Next Story
    ×