search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி
    X

    5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி

    5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. #AssemblyElectionResults2018 #MadhyaPradesh #Chhattisgarh
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.



    இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த 5 மாநில தேர்தல் ஒரு ‘மினி பொதுத்தேர்தலாகவே’ கருதப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், தெலுங்குதேசம், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு வரும் நிலையில், இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்த தேர்தல் அக்னி பரீட்சையாகவும் அமைந்தது.

    ஏற்கனவே வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகளின் மூலம் ராஜஸ்தானில் காங்கிரசும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் இழுபறி நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்தது. 2 மாநிலங்களில் காங். ஆட்சியை பிடித்தது

    இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்து உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரசுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகவும், பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 எம்.பி. தொகுதிகளில் 63 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா பெரும் இழப்பை சந்தித்து இருப்பது, அக்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

    இறுதியில் 199 தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களில் சிலர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் என்பதால், அவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

    ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஜெய்ப்பூர் நகரில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு அக்கட்சி தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

    230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 116 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

    எதிர்க்கட்சியான காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இதனால் யார் ஆட்சி அமைப்பது? என்பதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் கட்சி காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருக்கிறது.



    ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. இப்போது அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து உள்ளது.

    இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு 5 இடங்களே கிடைத்தன. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மிசோ மக்கள் இயக்கம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் தோல்வி அடைந்தார்.

    இந்த மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஏற்கனவே 1998-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆட்சி நடத்தி உள்ளது.
    Next Story
    ×