search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்: குமாரசாமி அறிவிப்பு
    X

    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்: குமாரசாமி அறிவிப்பு

    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இந்த தேர்தலுக்கு பிறகு யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

    காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து, எனது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 460 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது சவாலானது. தேர்தலுக்கு முன்பு, எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம்.

    நான் ஆட்சிக்கு வந்தவுடன், வாக்குறுதிப்படி 24 மணி நேரத்திற்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குறை கூறியது. சுமார் ரூ.43 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளேன். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.10 ஆயிரத்து 300 கோடியை தள்ளுபடி செய்து அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டோம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தேசிய வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. இதில் அரசியல் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி திட்டத்தால் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைகிறார்கள். நிதி பற்றாக்குறை இல்லை. கஜானா காலியாகிவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அரசு கஜானா நல்ல நிலையில் உள்ளது.

    கடன் தள்ளுபடி திட்டத்தால், மாநில அரசின் பொருளாதார நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தின் பொருளாதார நிலை நல்ல நிலையில் உள்ளது. தேசிய வங்கி கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி வைத்துள்ளேன். வருகிற 1-ந் தேதி முதல் தேசிய வங்கி விவசாய கடன் தள்ளுபடிக்கு பணத்தை செலுத்தும் பணி தொடங்கப்படும்.

    சமூக நலத்துறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ரூ.29 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 38 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு, பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசியை குறைத்தேன். ஆனால் காங்கிரசார், 7 கிலோ அரிசி வழங்குவதில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அதையும் வழங்க தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.6,500 கோடி செலவில் வெளிவட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். 60 மீட்டர் அகலம் அளவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    மேலும் நகரில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ரூ.9,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று கணக்கிடப்படுகிறது. காற்று மாசுபாடு குறையும். மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தடுக்கப்படும். இந்த திட்டமும் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

    பெங்களூருவில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டணமாக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலுத்தப்படுகிறது. தெருக் களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தினால் இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.15 கோடியாக குறையும். இந்த எல்.இ.டி. விளக்குகளை பொருத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    தகுதி அடிப்படையில் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளை அடக்கவும், சூதாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.



    பெங்களூருவில் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து பூஜை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட அமைப்பின் தலைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரூ.2,000 கோடி செலவில் பெங்களூரு மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குடகு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது.

    வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வந்த உதவித்தொகை குடகு மழை வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமே செலவிடப்படும். கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் கட்டப்படும்.

    மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு பல்வேறு சாலை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். கர்நாடகத்தில் மாணவ -மாணவிகள் குளங்கள் மற்றும் ஆறுகளை கடக்க வசதியாக 470 சிறு நடை பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படும். எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கடவுள் கொடுத்த அதிகாரம். கர்நாடகத்தை காப்பாற்றவே நாங்கள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம்.

    இடைத்தேர்தல் நடை பெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள 3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். அந்த பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. கர்நாடகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கர்நாடக அரசால் பாதுகாப்பு வழங்க இயலாது. இது கேரளா மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த மாநில விவகாரங்களில் தலையிட முடியாது. ‘மீ டூ‘ இயக்கம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதில் அரசின் நிலையை விரைவில் தெரிவிப்போம்.

    ஜனதா தரிசனம் மூலம் 17 ஆயிரத்து 723 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக திறன் அடிப்படையில் 3 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு பள்ளி-கல்லூரி கட்டிடங் களை சீரமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மைசூரு தசரா விழாவை காண 50 லட்சம் பேர் மைசூருவுக்கு வந்தனர். தசரா ஊர்வலத்தை மட்டும் 12 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy

    Next Story
    ×