search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுஷ்மான் பாரத் காப்புறுதி திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை
    X

    ஆயுஷ்மான் பாரத் காப்புறுதி திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை

    பிரதமரின் ஆயுஷ்மன் பாரத் மருத்துவ காப்புறுதி திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை. ஆனால், இரண்டாம் முறை ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #AyushmanBharat
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக பிரதமரின் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறும் மத்திய அரசின் திட்டத்தை 23-9-2018 அன்று ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக் கொண்டு, பிறகு கட்டண பில்களை செலுத்தி, பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி கிடையாது.

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் சுமார் 15 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள்.
     
    இந்நிலையில், இந்த திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை. ஆதார் அட்டை இருந்தால் அதை காட்டலாம். அல்லது, வாக்களர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய அரசு ஆவணங்களை காட்டி சிகிச்சை பெறலாம்.


    ஆனால், ஆதார் அட்டைக்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் குறிப்புட்டுள்ளதால் இரண்டாம் முறை ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டாம் முறை இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ஆதார் எண் இல்லை என்றாலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த மனு எண்ணை காட்டி சிகிச்சை பெறலாம் என தேசிய சுகாதார திட்டத்தின் தலைமை செயல் அலுவலர் இந்து பூஷன் தெரிவித்துள்ளார்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 47 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் மூலம் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Aadhaarmandatory #AyushmanBharat
    Next Story
    ×