search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு வரவேண்டாம்: குமாரசாமி பேச்சு
    X

    விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு வரவேண்டாம்: குமாரசாமி பேச்சு

    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வரவேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காந்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களின் தலைநகரங்களிலும் காந்திபவன் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் காந்திபவன் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. அந்த மாவட்டங்களில் எங்கு இடம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கு காந்திபவன் கட்டப்படும். 30 மாவட்டங்களிலும் காந்திபவன் கட்டப்படும். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே சென்று விட்டு எந்த பிரச்சினையும் இ்ல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாகும். அவரது கனவை கர்நாடகத்தில் நினைவாக்க நான் மிகவும் விரும்புகிறேன். மக்கள் நிம்மதியாக வாழ சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும். கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்காக பெங்களூரு நகர போலீஸ் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

    எந்த விதமான நெருக்கடிகளுக்கும் அடி பணியாமல் சுதந்திரமாக மக்களுக்காக பணியாற்றும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் சொன்னால் கூட நீங்கள் கேட்க வேண்டாம், நேர்மையாக பணியாற்றுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக போலீசாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது.



    பல கோடி ரூபாயை வைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் விடுதிகள் மீது போலீசார் சோதனை நடத்தி வருவதுடன், சூதாட்டத்திற்கு கடிவாளம் போட்டு வருகின்றனர். பெங்களூருவில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தற்போது பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நகரின் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும்.

    இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தேன். லாட்டரி விற்பனையை தடை செய்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிப்பேனா?. புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்க நான் ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது தவறானது. மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு புதிய மதுக்கடைகள் திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அதனால் புதிய மதுக்கடைகள் திறக்க ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

    ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை விருப்பம் இல்லாமல் நடத்துவதாக சிலர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் காலையில் இருந்து இரவு வரை மக்களின் குறைகளை கேட்டு அறிவதுடன், ஏராளமான மக்களின் குறைகளை சரி செய்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதாலும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தேன். ஒரு விவசாயி தற்கொலை செய்வதால், அவரது குடும்பமே வீதிக்்கு வந்து விடுகிறது. அதனால் எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    Next Story
    ×