search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற 70 சதவீதம் கட்சிகள் வலியுறுத்தல்
    X

    தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற 70 சதவீதம் கட்சிகள் வலியுறுத்தல்

    வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பிக்கையை இழந்துள்ள இந்தியாவின் 70 சதவீதம் அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வலியுறுத்தியுள்ளன. #ECtorevertballot #ballotpapervoting
    புதுடெல்லி:

    விரைவில் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருந்தது.

    டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர சுமார் 70 சதவீதம் கட்சிகளின் பிரதிநிதிகள் இனிவரும் தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையையே பின்பற்றுமாறு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வகையில் நாட்டில் உள்ள 30 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களுடன் வாக்குச்சீட்டு முறையும் வைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், தற்போது சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநில வாக்களர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களும், ராஜஸ்தானில் 45 லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் என்று அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், 'கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலிப்போம். அவர்களுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்கும்’ என கூறினார். #ECtorevertballot  #ballotpapervoting 
    Next Story
    ×