search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்க ஒரு அரசியல் தலைவர்
    X

    அடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்க ஒரு அரசியல் தலைவர்

    கார்கில் போர், அணுகுண்டு சோதனை என இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்க வைத்த வாஜ்பாய் எனும் தலைவர் என்றும் வரலாற்றில் இருப்பார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். பிரதமர் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர். 

    மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

    வாஜ்பாயின் அரசியல் பயணம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார். 23 நாட்கள் அப்போது சிறைவாசம் அனுபவித்தார்.



    பாஜகவின் தாய் இயக்கமான ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் சீடராக இணைந்த வாஜ்பாய் அரசியலில் கால் பதிக்க தொடங்கினர். 1957-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

    தனது பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட வாஜ்பாய், பின்னாளில் நாட்டின் பிரதமராக வருவார் என அப்போதைய பிரதமர் நேரு சிலாகித்து புகழ்ந்துள்ளார். எமர்ஜென்சியில் சிறை சென்ற வாஜ்பாய், எமர்ஜென்சிக்கு பின்னர் ஜனதா கூட்டணியாக பல தலைவர்களுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்து வென்று மொராஜி தேசாராய் மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியாக இடம் பிடித்தார்.

    ஜனதா கூட்டணி 1979-ல் கலைந்த பின்னர், அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் இணைந்து வாஜ்பாய் பா.ஜ.க.வை தொடங்கினார். கடின முயற்சி எடுத்து கட்சியை வளர்த்து காங்கிரசுக்கு நிகரான கட்சியாக அதனை மாற்றினார். 

    1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நாட்டின் பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

    1996-1998 காலகட்டத்தில் இரண்டு முறை ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் வீழ்ச்சியடைய, ஆட்சி கலைக்கப்பட்டது, மறுபடியும் தேர்தல் நடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 13 மாதங்கள் கழித்து, அ.தி.மு.க. தனது ஆதரவை திரும்ப பெற்றதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். 

    பின்னர் 1999 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த முறை தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.



    வாஜ்பாய் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள், கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியா-பாகிஸ்தான் பேருந்து சேவை என உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

    குறிப்பாக இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேற்றம் அடைந்தது.  தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஏற்றம் கண்டன. 

    அரசியல்வாதி மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் என பனமுகத் திறமை கொண்ட வாஜ்பாய், இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

    உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், பல ஆண்டுகளாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாஜகவை விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை செலுத்தும் வண்ணம் அவரது அரசியல் செயல்பாடுகள் இருந்தது. இந்த செயல்பாடுகள் மூலம் அவர் என்னென்றும் நினைவு கூறத்தக்க வகையில் இருப்பார்.
    Next Story
    ×