search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வை விட்டு வந்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் - தினகரன்
    X

    தி.மு.க.வை விட்டு வந்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் - தினகரன்

    தி.மு.க.வை விலக்கி வைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி வந்தால் அவர்களுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து விட்டு வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமாக டி.டி.வி. தினகரன் நிருபரிடம் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் நிச்சயமாக 37 இடங்களை கைப்பற்றும்.


    எங்களுடன் கூட்டணி வைக்கும் உணர்வில் சிலர் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.வை விலக்கி வைத்து விட்டு அந்த அணியில் இருந்து விலகி காங்கிரஸ் வந்தால் அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்போம். அதுவும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சரியான பாதையில் விசாரணையை கொண்டு செல்கிறார். நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி வருகிறார்.

    அவரது தலைமையிலான விசாரணையில் பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இருப்பினும் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. யாரைக் காப்பாற்ற இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் தமிழக அரசு மீது எழுகிறது. சிலை கடத்தல் குறித்து விசாரிக்கும் பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றாலும் அவருக்கு பணி நீட்டிப்பு செய்து சிலை கடத்தல் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படும்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்திற்கு 8 வழி பசுமைச்சாலை தேவை இல்லாதது. விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அது மக்களுக்கு தேவையில்லை.

    எனது கார் எரிப்பு சம்பவம் சிலரது தூண்டுதலின் பேரில் நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அது தீ விபத்தா? அல்லது வெடி விபத்தா? என்பது தடயவியல் பரிசோதனை முடிவு வந்தபிறகு தான் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Congress
    Next Story
    ×