search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பரவவில்லை- முதல் கட்ட ஆய்வில் தகவல்
    X

    நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பரவவில்லை- முதல் கட்ட ஆய்வில் தகவல்

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் பரவவில்லை என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.#Nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் நிபா வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 50 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது 25 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளது.

    அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மற்ற ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் சில நாட்களில் கிடைக்குமென்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத்துறையினர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    முதல் கட்டமாக 50 டோசோஜ் மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படுமென்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலமே பரவியது என்று கூறப்பட்டது. இதற்கிடையில் முதல் கட்ட ஆய்வில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    பூச்சிகளை உண்ணும் சிறிய வவ்வால்களின் ரத்த மாதிரிகளின் ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அதே சமயம் பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரி, உமிழ்நீர் தொடர்பான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அந்த முடிவுகளும் வந்த பிறகுதான் நிபா வைரஸ் பரவியதற்கான காரணம் தெரிய வரும்.

    இதற்கிடையில் வவ்வால்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும், வவ்வால் கடித்த பழங்களை பொதுமக்கள் சாப்பிட வேண்டாம் என்று கூறப்பட்டதால் கேரளாவில் பழங்கள் விலை சரிந்துள்ளது. பழங்கள் விற்பனையும் பாதியாக குறைந்து விட்டது.#Nipahvirus
    Next Story
    ×