search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமளி காரணமாக 22 நாட்களும் முடங்கிய பாராளுமன்றத்தில் நடந்தவை என்ன?
    X

    அமளி காரணமாக 22 நாட்களும் முடங்கிய பாராளுமன்றத்தில் நடந்தவை என்ன?

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்த நிலையில், மொத்தம் 250 மணி நேரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. #BudgetSession
    புதுடெல்லி:

    கடந்த மாதம் 5-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட முதல் அமர்வு சுமூகமாக நடந்த நிலையில், இரண்டாவது அமர்வு பெரும்பாலான நேரத்தில் கூச்சல், குழப்பத்திலேயே கழிந்தது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி.க்கள், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைப்பதற்காகவே கூடியது போல இருந்தது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது திடீர் திருப்பமாக பார்க்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.



    நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என எதிர்பார்த்து கூட்டத்தொடர் முடிவடைந்ததுதான் மிச்சம். ஏனென்றால், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நோட்டீஸை எடுத்துக்கொள்ள முடியாது என மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.

    இதனால், மத்திய அரசை காப்பாற்றுவதற்காகவே அ.தி.மு.க. அவையை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 22 நாட்கள் ஒத்திவைப்பதற்காகவே நடந்த இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை எத்தனை மணி நேரம் ஒழுங்காக நடந்தது, எத்தனை கேள்விகளுக்கு மந்திரிகள் பதில் அளித்துள்ளனர் என்ற தகவலை பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது.

    மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மந்திரிகள் நேரடியாக பதிலளித்துள்ளனர். மற்ற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. 29 அமர்வுகளாக நடந்த மக்களவையில் 34 மணிநேரம் 5 நிமிடம் மக்களவை நடந்துள்ளது. 127 மணிநேரம் 45 நிமிடம் அமளியால் அவை முடங்கியுள்ளது.

    நிதிமசோதா, பணிக்கொடை உயர்வு மசோதா உள்பட 5 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், நிதிமசோதா கடும் அமளி காரணமாக விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    30 அமர்வுகளாக நடந்த மாநிலங்களவையில் நான்கில் மூன்று பங்கு நேரம் அமளியால் வீணாகியுள்ளது. 44 மணிநேரம் அவை நடந்துள்ள நிலையில், 121 மணிநேரம் அவை முடங்கியே இருந்துள்ளது. #BudgetSession #LokSabha #RajyaSabha #Parliment #TamilNews
    Next Story
    ×