search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறமையான இளைஞர்களை கொண்டு காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவோம்- ராகுல் காந்தி சபதம்
    X

    திறமையான இளைஞர்களை கொண்டு காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவோம்- ராகுல் காந்தி சபதம்

    டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திறமையான இளைஞர்களை கொண்டு காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவோம் என சபதம் செய்துள்ளார். #CongressPlenarySession #RahulGandhi
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

    இன்றைய மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: 

    பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினரும் கவுரவர்கள் போல் அதிகாரத்துக்காக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால், நாங்கள் பாண்டவர்கள் போல் உண்மைக்காக போராடி வருகிறோம். பா.ஜ.க. என்பது ஓர் அமைப்புக்காக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. ஆனால், தேசத்துக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருகிறது. 

    அழகிய தமிழ் மொழியை சிதைக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. தமிழக மக்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது; அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு தமிழக மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    கப்பார் சிங் வரி முதல் யோகா வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தாலும், பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறப்பதில்லை.  நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் இருந்து பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்பி வருகிறார். 



    இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ள போதிலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது.

    தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கு இடையில் பெரிய சுவர் உள்ளது. எனது முதல் வேலை அந்த சுவரை அகற்ற வேண்டும். இதுகுறித்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசவுள்ளேன்.

    பா.ஜ.க.வில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தலைவராக இருந்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் அப்படி யாரும் தலைவராக முடியாது. இந்திய வங்கிகளில் இருந்து 33 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தவர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பாதுகாத்து வருகிறது. அதற்கு காரணம், முதலாளித்துவ நிறுவனங்களில் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகள் பணி செய்து வருவதால், அவரும் மவுனம் காத்து வருகிறார். வங்கிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்போரை பா.ஜ.க. அரசு காப்பாற்றி வருகிறது. பணக்காரர்களின் காப்பாளராக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #CongressPlenarySession #RahulGandhi #Tamilnews
    Next Story
    ×