search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம் எந்திரத்தில் மாற்றம் செய்து ரூ.200 நோட்டு கண்டிப்பாக வைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி
    X

    ஏ.டி.எம் எந்திரத்தில் மாற்றம் செய்து ரூ.200 நோட்டு கண்டிப்பாக வைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி

    அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம் எந்திரத்தில் மாற்றம் செய்து ரூ.200 நோட்டுகளை கண்டிப்பாக வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. #RBI #ATM
    புதுடெல்லி:

    ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில் முதலில் ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்துக்கு வந்தது. பின்னர் தாமதமாக ரூ.500 புழக்கத்துக்கு வந்தது.

    ஆனால், ஏற்கனவே இருந்த ரூபாய் நோட்டுகளின் அளவை விட இது சிறிதாக இருந்தது. எனவே, இந்த பணத்தை ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் கால தாமதமாகவே ஏ.டி. எம்.கள் மூலம் இந்த பணம் மக்களுக்கு கிடைத்தது.



    இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவந்த நிலையில் புதிதாக ரூ.200 வெளியிடப்பட்டது. அது சில மாதங்களுக்கு முன்புதான் புழக்கத்துக்கு வந்தது. ஆனால், 200 ரூபாய் நோட்டும் ஏ.டி.எம்.மில் வைக்க முடியாதபடி வேறு அளவில் இருக்கிறது.

    எனவே, 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் நேரடியாக மட்டுமே வழங்குகிறது. ஏ.டி.எம்.மில் வைக்கவில்லை. ரூ.200 நோட்டை வைக்கும் வகையில் ஏ.டி.எம்.மில் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருப்பதால் வங்கிகள் அந்த பணியை செய்யவில்லை.

    ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த வி‌ஷயம் வந்தது. இதையடுத்து அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம்.களில் கண்டிப்பாக ரூ.200 பணத்தை வைக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி எந்திரங்களில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    ஏ.டி.எம். தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏ.டி.எம். எந்திரத்தில் மாற்றம் செய்வதற்கு ஒவ்வொரு எந்திரத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் செலவாகும். மேலும் பல்வேறு செலவுகளும் ஏற்படும்.

    எனவே, வங்கிகள் ரூ.1000 கோடி வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறினார்கள். இது, வங்கிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    நாட்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 6 மாதம் வரை ஆகும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டில் ரூ. 2 லட்சத்து 44 ஆயிரம் கோடி ஏ.டி.எம்.கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.17 லட்சம் கோடி நோட்டுகள் மக்களிடம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.  #RBI #ATM #tamilnews
    Next Story
    ×