search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஜு ராதாகிருஷ்ணன் - சரிதாநாயர்
    X
    பிஜு ராதாகிருஷ்ணன் - சரிதாநாயர்

    சோலார் பேனல் மோசடி வழக்கு: விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

    முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீதான சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் நீதிபதி சிவராஜன் இன்று தாக்கல் செய்கிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் அமைத்து தருவதாக பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் பாதுகாப்பு அதிகாரியும் கைதானார். சோலார் பேனல் மோசடியில் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதையடுத்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு முதல்-மந்திரி உம்மன்சாண்டி உள்பட வழக்கில் தொடர்புடைய பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

    நீதிபதி சிவராஜன் கமிஷனின் விசாரணை முடியும் முன்பு கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழந்தது.

    பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

    புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் விசாரணை தொடர்ந்தது. அடுத்த மாதத்துடன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.

    இந்த நிலையில் நீதிபதி சிவராஜன் நடத்தி வந்த சோலார் பேனல் வழக்கு விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பான அறிக் கையை நீதிபதி சிவராஜன் தயாரித்து வந்தார்.

    இன்று மாலை 3 மணிக்கு அவர், அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பிப்பார் என தெரிகிறது. அறிக்கை ஒப்படைக்கப்பட்ட பின்னரே அதில், என்ன இருக்கிறது? என்பது தெரிய வரும்.

    இந்த வழக்கில் கைதான சரிதாநாயர் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், முதல் மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கிறார்.

    Next Story
    ×