search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆசாமி சிக்கினான்: உ.பி. போலீஸ் அதிரடி
    X

    மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆசாமி சிக்கினான்: உ.பி. போலீஸ் அதிரடி

    மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஆசாமியை, 24 ஆண்டுக்குப் பிறகு உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    லக்னோ:

    மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 100 பேரை குற்றவாளிகள் என்று மும்பை தடா கோர்ட் கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவித்தது. இதில், குற்றவாளி யாகூப் மேமனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட முஸ்தபா டோசா, நிழல் உலக தாதா அபுசலீம், கரிமுல்லா கான், பெரோஸ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது தடா கோர்ட்டில் தனி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    விசாரணையின் இறுதியில், தடா கோர்ட் நீதிபதி ஜி.ஏ.சனப் வழங்கிய தீர்ப்பில், தாதா அபுசலீம், முஸ்தபா டோசா, கரிமுல்லா கான், பெரோஷ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். அப்துல் கயூமுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஒரு குற்றவாளி 24 ஆண்டுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் பகுதியை சேர்ந்த காதர் அகமது என்பவரை தீவிரவாத எதிர்ப்பு போலீசார் மற்றும் குஜராத் போலீசாரும் இணைந்து இன்று மடக்கிப் பிடித்தனர். மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய டைகர் மேமனுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும், வெடிபொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட காதர் அகமதுவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபின், குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×