search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி - திருச்சியில் வைகோ பேச்சு
    X

    தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி - திருச்சியில் வைகோ பேச்சு

    தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி என்றும் ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களின் வாழ்வு சிதைந்து விட்டதாகவும் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார். #Vaiko
    திருச்சி:

    தி.மு.க. கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். இது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும். கொடூர சிந்தனையாளர்களால் மட்டுமே இது போன்று சிந்தித்து செயல்பட முடியும். நாட்டில் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று கூறுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

    டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ரகசிய அனுமதி இப்படி பல துரோகங்களை மோடி தமிழகத்திற்கு செய்துள்ளார். கஜா புயலில் சிக்கி 83 பேர் இறந்தபோது இரங்கல் செய்தி கூட தெரிவிக்காத மோடி தமிழர்களிடம் வந்து எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டு கேட்கிறார்.

    தமிழகத்தில் கல்வி, பருப்பு, பஸ் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஊழல் தலை விரித்தாடுகிறது. பல பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆட்சியாளர்கள் லஞ்சம் கேட்டதால், வெளி மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களின் வாழ்வு சிதைந்து விட்டது.

    கல்வி மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறார். இது குறித்து கேட்டால் நான் காவலன் என்கிறார். மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தநிலை தொடர்ந்தால் இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்து போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அழித்து விட்டு விவசாய நிலங்களை அபகரித்து அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து, அந்த நிலத்தில் பல்லாயிரம் அடி ஆழத்தில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் எடுத்து விவசாய நிலங்களை பொட்டல் காடுகளாக்குவதுதான் மோடியின் திட்டம்.

    இதன் மூலம் மோடி அரசுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல லட்சம் கோடி லாபம் கிடைக்கும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியில் இருந்து தனது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்தவர் பாரிவேந்தர். விவசாயிகளையும், வியாபாரிகளையும் வாழ வைக்கக் கூடியது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    Next Story
    ×