search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி கட்டாயத்தினால் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
    X

    அன்புமணி கட்டாயத்தினால் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

    ராமதாசுக்கு அதிமுக கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை எனவும் அன்புமணியின் கட்டாயத்தினால் தான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். #UdhayanidhiStalin
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி 4ரோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது கூடிய கூட்டம் பிரசாரம் கூட்டம் போல் தெரியவில்லை. ஒரு மாநாட்டிற்கு வந்த கூட்டம் அலைகடலென திரண்டிருந்தனர்.

    இதுபோன்று நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மோடிக்கு எதிர்ப்பு அலை இருப்பதாகவும், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அலை இருப்பதாகவும் கருதுகிறேன்.

    மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சியாக திகழ்கிறது. கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி 5 வருடம் ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வருகின்ற சூழ்நிலையில் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் கூட பணம் போடவில்லை. அதற்கு பதிலாக நாமத்தைதான் போட்டுள்ளார்.

    புதிய இந்தியாவை கொண்டு வருகிறேன் என்று கூறி இரவில் அவர் மட்டும் முழித்து இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று அறிவித்து இருந்தார்.

    இதன் பலனாக பாமர ஏழை மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்திருந்ததுதான் மிச்சம். இப்படி காத்திருந்த ஏழை மக்களில் 150 பேர் இறந்துள்ளனர்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று மோடி அறிவித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டு வந்து 10 கோடி பேருக்கு வேலையிழக்க செய்தார். இதனை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்து வருகிற 18-ந் தேதி அன்று மோடியை கெட்டுஅவுட் செய்ய வேண்டும்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய 2 பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சையாகும். அவர்கள் இந்த பதவியை பயன்படுத்திக் கொண்டு ஒக்கி, கஜா போன்ற புயலில் பாதிப்படைத்த மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கவில்லை.

    மேலும், ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது கூடிய மக்களை கலைப்பதற்காக 13 பேரை சுட்டு கொன்றது இந்த ஆட்சி. ஆனால், இதுவரை மோடியோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

    வெளிநாடுகளில் சுற்றி திரிந்த மோடி இந்த 5 வருடங்களில் பிரச்சினை காலங்களில் தமிழகத்திற்கு ஒரு தடவைக் கூட வரவில்லை. ஆனால் தேர்தல் வந்ததும், 3 முறை மோடி வந்து சென்றுள்ளார்.

    கடந்த மாதம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓ.பி.எஸ். என்றும், முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்றும் கூறியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், அவர்கள் தற்போது மோசடி கூட்டணியுடன் சேர்ந்து உள்ளனர்.

    மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அவர் சென்ற தேர்தலின்போது கூறி வந்தார். தற்போது பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று தெரிகிறது.

    ஒரு எம்.பி. சராசரியாக 80 சதவீதம் வருகை தரவேண்டும். ஆனால் அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கும் பாராளுமன்றத்தில் 40 சதவீதம் மட்டுமே வருகை தந்துள்ளார்.



    இதேபோன்று பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. சராசரியாக தொகுதி வாரியாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கு வெறும் 12 கேள்விகளை மட்டுமே எழுப்பி உள்ளார்.

    அதுமட்டுமில்லாமல் தர்மபுரி பாராளுமன்ற பிரச்சினை குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தெரிகிறது.

    ராமதாசுக்கு இந்த கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை. ஆனால் அன்புமணியின் கட்டாயத்தினாலோ அல்லது பணம் வாங்கியதலோ இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலின்போது நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன் என்று கூறினார். ஆனால் அவர் இங்கு ஒரு நாள் கூட தங்கவில்லை.

    மேலும், அவர் இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார் ஆனால் இங்கு ஒரு தொழில் நிறுவனம் கூட அமையவில்லை.

    ஆகவே, தி.மு.க. சார்பில் எனது தாத்தா கலைஞர் வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குபடி செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு, கல்வி கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ரெயில், பஸ்பாஸ் வழங்கப்படும். டி.வி. கேபிள் கட்டணம் குறைப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்துவோம். அண்ணன் ராகுல்காந்தி 25 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். ஆனால், ஊழல் ஆட்சியை சேர்த்தவர்கள் இவற்றை தரமுடியாது என்று கூறி வருகின்றனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஏனென்றால் இதனை கூறியது மோடி அல்ல, ராகுல் காந்தி. சொன்னது சொன்னபடி நடைபெறும். 100 நாள் வேலை திட்டத்தை தற்போது உள்ள ஆட்சி 40 நாட்களாக குறைத்துள்ளது. மீண்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதாவின மறைவு குறத்து இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் செயல்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, நீட் தேர்வில் அனிதா இறப்பு என பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

    இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin
    Next Story
    ×