search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ் முன்னிலையில் திருவாரூர் ஒன்றிய அமமுக செயலாளர் ராமன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.
    X
    அமைச்சர் காமராஜ் முன்னிலையில் திருவாரூர் ஒன்றிய அமமுக செயலாளர் ராமன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

    அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தினகரன் கட்சியினர்

    திருவாரூர் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    திருவாரூர்:

    நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் அ.ம.மு.க. கட்சிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டிருப்பது கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர் என்று ஆரம்பம் முதலே தினகரன் கூறி வந்தார். இந்த தேர்தல் முடிவை பார்த்து அவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் அ.ம.மு.க.வின் நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்த கட்சியில் இருந்து விலகி தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் திருவாரூர் ஒன்றிய அ.ம.மு.க செயலாளர் ராமன் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று இரவு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான இரா.காமராஜை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    அவருடன் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய அவைத் தலைவர் காளிதாஸ், ஒன்றிய பொருளாளர் ராஜா, ஊராட்சி செயலாளர்கள் ஜோதிபாசு, செல்வம், மதியழகன் உள்ளிட்டோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்களை அமைச்சர் காமராஜ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி . கோபால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசை மணி, திருவாரூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதுபற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:-


    அ.ம.மு.க. வை தினகரன் தொடங்கிய போது அவரை நம்பி 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். தற்போது அவர்கள் அனைவரையும் தேர்தலில் தோல்வி அடைய வைத்து ரோட்டில் நிற்க வைத்து விட்டார். இந்த தேர்தல் தோல்வி மூலம் தினகரன் பக்கம் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர் என்று தெளிவாகி விட்டது.

    தற்போது திருவாரூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதால் தினகரன் கட்சி கூடாரம் காலியாகி வருகிறது.

    இனி அவர் அ.தி.மு.க.வில் சிலீப்பர் எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகிறார்கள் என்று மிரட்ட முடியாது. அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பக்கமே உள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×