search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
    X

    பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் விக்கிரவாண்டி கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா, மணிமொழி, பெளதாரணி ஆகிய 3 பேர் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    திருச்சி மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி கங்கை கொண்டானில் நடந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த அம்சத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், பிரவீன்ஜீவரூபி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தவசிமுத்து ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

    கும்பகோணம் வட்டம், அரசு கவின் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சின்னமலை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் வட மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளார்.

    திருக்கோவிலூர் கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், ரஷ்யா நாட்டு கடல் பகுதியில், கப்பல் தீப்பிடித்து உயிரிழந்தார்.

    விக்கிரவாண்டி மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் தனது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தார்.

    மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    மதுரை தெற்கு பெத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரரின் மீது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    Next Story
    ×