search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் உடல் திருச்சி வந்தது- நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி
    X

    புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் உடல் திருச்சி வந்தது- நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி

    புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack
    திருச்சி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


    இந்த விமானம் இன்று காலை 11.10 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு அஞ்சலிக்காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டது.

    தேசியக்கொடி போர்த்தப்பட்ட பெட்டியில் சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.


    மத்திய மந்திரி ஆனந்த குமார் ஹெட், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கலெக்டர்கள் ராஜாமணி (திருச்சி), விஜயலட்சுமி (அரியலூர்), திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது.

    சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும் அரியலூர் சென்று சிவச்சந்திரனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறார்.

    இன்று மாலை 4 மணிக்கு சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியன் உடல் தனி வாகனத்தில் சொந்த ஊரான கயத்தாறு கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா வீரர்களின் உடல்களும் தனித்தனியாக சொந்த ஊர்களுக்கு திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

    முன்னதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்துக்கு சென்று சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFAttack #SivaChandran #Subramaniyan
    Next Story
    ×