search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக முன்பு எதிர்கட்சிகள் தூசிக்கு சமம்- வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
    X

    அதிமுக முன்பு எதிர்கட்சிகள் தூசிக்கு சமம்- வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

    தஞ்சையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம் எம்பி, அதிமுக முன்பு எதிர்கட்சிகள் தூசிக்கு சமம் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி 3-வது கேட் முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் பேச்சாற்றலால் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர், அண்ணாவின் கொள்கைகளை திரைப்பட வசனம், பாடல்கள் மூலம் பட்டி, தொட்டி எங்கும் பரப்பினார். முதன் முதலில் தி.மு.க. ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். படித்தவர்கள் மத்தியில் அண்ணாவின் பேச்சாற்றல் மூலம் தி.மு.க. கொள்கை சென்றடைந்தது என்றால் அந்த கொள்கையை படிக்காதவர்கள் மத்தியில் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். தான்.

    தி.மு.க. வளர, ஆட்சிக்கு வர துணை நின்றார். அ.தி.மு.க.வை தொடங்கிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளுக்கு நல்ல திடங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

    அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து இருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். எங்களிடம் சேதாரம் தான் ஏற்பட்டு இருக்கிறது. சிதறி கிடப்பவர்கள் காந்த துகளை போல் ஒட்டி கொள்வார்கள். எங்களுக்கு தி.மு.க.வே எதிரியாக இல்லாதபோது, ரஜினி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தாலும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களுக்கு தூசிதான். கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தம் இல்லாமல், நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் இணைத்து பேசுகிறார். இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மடியில் கனம் இல்லை. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

    எங்களை விட்டு பிரிந்து தவறான பாதைக்கு சென்றவர்களை வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறோம். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். குடும்ப வாரிசுக்கு இடம் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×