search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயபிரகாஷ் - தமிழ்செல்வன்
    X
    ஜெயபிரகாஷ் - தமிழ்செல்வன்

    கோவை அருகே ரூ.1 கோடி நகை கொள்ளை - சென்னை கோர்ட்டில் 2 பேர் சரண்

    கோவை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ராயபுரம்:

    திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கடந்த 7-ந்தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

    கோவை நவக்கரை அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து ஊழியர்களை மிரட்டி காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நகைக்கடை ஊழியர்கள் வந்த கார் மதுக்கரை தென்றல் நகரிலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற 2 கார்களில் ஒரு கார் வலுக்குப்பாறையிலும் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கார்களை மீட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் விசாரித்த போது கோவையை சேர்ந்த ஒருவருக்கு காரை விற்று விட்டதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் வேலூரை சேர்ந்த ஒருவர் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதும், மொத்தம் 11 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை, வேலூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த தமிழ்செல்வன், ஜெய பிரகாஷ் ஆகியோர் நேற்று சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருவரும் கோவை கோர்ட்டில் 18-ந் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அப்போது இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×