search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிவாரண குழு அமைக்க வேண்டும்- வைகோ
    X

    அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிவாரண குழு அமைக்க வேண்டும்- வைகோ

    புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எதிர்ப்பை சமாளிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிவாரண குழு அமைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #GajaCyclone
    திருச்சி:

    திருச்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் வளம் கொழிந்த பகுதியான காவிரி பாசன பகுதி கஜா புயலால் நாசமாகியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் 51 பேர் பலியாகியுள்ளனர். காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடக்கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம், மருத்துவர்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    தமிழக அரசு ஆயிரம் கோடி நிவாரணம் அளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. புயல் நிவாரண பணி, மீட்பு பணிகளில் ஈடுபட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அப்போது தான் மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். புயல் முன்னேற்பாடுகளில் இதைவிட எந்த சர்க்காரும் சிறந்து செயல்பட முடியாது. அதை தாண்டி ஏற்பட்ட சேதங்கள் வேதனையளிக்கிறது. மக்கள் தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆளும் கட்சி, எதிர்கட்சி இணைந்து செயல்பட்டது. அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் போது எதிர்ப்பு வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

    வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழக அமைச்சர்கள் பார்க்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை. ஒன்று நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும். இல்லை உடனடியாக மாநில அரசிற்கு அனுமதி வழங்கி கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். மற்ற பகுதிகளில் சேதம் ஏற்பட்டபோது பார்வையிட்ட பிரதமர் ஒரு நாள் நேரம் ஒதுக்க முடியாதா? பிரதமர் மோடி வெளிநாட்டு இந்தியர்களின் பிரதமராக செயல்படுகிறார்.


    தமிழகத்திற்கு பிரதமர் மோடி இல்லை. உள்ளாட்சிதேர்தல் நடந்திருந்தால் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலம் நிவாரண பணிகளை செய்திருக்க முடியும்‌. அதற்கும் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் கவர்னர் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக அல்ல. கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசின் புரோக்கராக செயல்படுகிறார். இதே கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவரின் பேத்திகள் எரித்து கொல்லப்பட்டிருந்தால் இதேபோல் விளக்கம் கூறுவாரா? 7 பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானம், பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை காப்பாற்றுவதற்கு தான். மரண தண்டனைகள் வேண்டாம் என்பது ம.தி.மு.க.வின் கொள்கை.

    மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க கோரி நவம்பர் 24ந்தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க.வின் தலைமையில் ம.தி.மு‌.க. தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone
    Next Story
    ×