search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
    X

    கஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது.

    அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபரிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் வருகிற 15-ந்தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.

    இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாகை, கடலூர், காரைக்காலில் வழக்கத்தை விட கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயரும். எனவே மீனவர்கள் 16-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி இரவு வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.



    15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.

    தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

    15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக் கூடும். காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போதைக்கு 15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ. மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதை எச்சரிப்பதாகும்.

    புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்யும்.

    தற்போது புயல் தெற்கு திசை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gajastorm #storm #rain
    Next Story
    ×