search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்
    X

    பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்

    மத்தியில் ஆட்சி செய்த பிறகும் தமிழகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை :

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் சிவாஜிகணேசனின் 91-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாஜிகணேசனின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி சிவாஜிகணேசன் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பொது செயலாளர் கே.சிரஞ்சீவி, சிவாஜி நலப்பேரவை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், கலைப்பிரிவு நிர்வாகிகள் சிவாஜி பாபு, ஆதவன், சுப்பிரமணியன் மற்றும் பிராங்களின் பிரகா‌ஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிவாஜி படத்துக்கு மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பெரும் கோடீஸ்வரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. வங்கியில் உள்ள மக்கள் பணத்தை விஜய் மல்லையா தொடங்கி நீரவ் மோடி வரை ஏராளமானவர்களுக்கு கடனாக வழங்கி உள்ளது. கடன் வாங்கியவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து விட்டு சென்று இருக்கின்றனர்.



    கடந்த 4½ ஆண்டு கால பா.ஜனதா அரசு பெரும் கோடீஸ்வரர்களுக்கு பணத்தை தாரை வார்த்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவாதிப்போம். மத்தியில் ஆட்சி செய்த பிறகும் பா.ஜனதா உடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட யாரும் இல்லாத நிலை தான் மற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிப்பதை பொன்.ராதாகிரு‌ஷ்ணன் போன்றவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை அவர்களின் புலம்பலாக தான் கருதுகிறேன்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சடங்கு, சம்பிரதாயத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டது. நிறைவு நாள் விழாவில் 15 லட்சம் 20 லட்சம் பேர் கூடினார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த மைதானத்தில் இடம் கிடையாது. அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாக தான் அதை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக கொண்டாடவில்லை. பேனர் வைக்க கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி பேனர்களை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவை தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பாத்திமா ரோஸ்னா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வக்கீல் சுதா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, துணை தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #Thirunavukkarasar #Congress
    Next Story
    ×