search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் சட்டம் சிக்கலை தீர்க்காது - ராமதாஸ் கருத்து
    X

    முத்தலாக் சட்டம் சிக்கலை தீர்க்காது - ராமதாஸ் கருத்து

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமல்படுத்தப்பட்ட முத்தலாக் அவசர சட்ட மசோத இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.


    மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சங்கள் இஸ்லாமிய இணையரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பிணக்கை பெருக்கி விடும். அவ்வாறு பிணக்கு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியின்றி போய்விடும். அத்தகைய சூழலில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியத்தை எவ்வாறு காக்க முடியும்?

    இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன் வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் மீது தனக்கு கரிசனம் உள்ளது என்ற கயமை நாடகம் ஆடி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசரக் கோலத்தில் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி தற்போது அதற்கு அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது.

    உரிமையியல் தொடர்பான பிரச்சினையைக் குற்றவியல் சட்டமாக மாற்றும் இந்த அவசர சட்டம் முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதிக அளவில் முஸ்லிம்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது.

    எனவே, மத்திய அரசு சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும், இல்லையேல் இந்த அவரச சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்களைத் திரட்டி தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி போராடும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance #Ramadoss
    Next Story
    ×