search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் பா.ம.க. போட்டியா? ராமதாஸ் பேட்டி
    X

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் பா.ம.க. போட்டியா? ராமதாஸ் பேட்டி

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #thiruvarurelection

    மயிலாடுதுறை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள உயர்அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வழக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து வெளிகொண்டுவர வேண்டும். எனவே பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம் என்று கூறியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்மேலாண்மை குறித்து புரிதல் இன்னும் தேவை. மேலணை உடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழ் அணையின் உறுதி தன்மை குறித்து இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வும் நடத்தவில்லை. கீழணையில் போக்குவரத்தை முற்றிலும் தடைசெய்து போக்குவரத்தை மாற்றவேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    முல்லைப்பெரியாறு அணை திறந்ததால் கேரளாவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால்தான் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பிறமாநிலங்களை விட தமிழகம்தான் அதிக அளவில் உதவி செய்து வருகிறது. இருமாநில மக்களிடம் உள்ள நல்உறவை கேரளஅரசு பிளவுபடுத்தக்கூடாது. முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து தொடர்ந்து 142 அடி நீர்தேக்குவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்று அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாமக மாநில தலைவர் கோ.க.மணி, மாநிலப் பொருளாளர் திலகபிரபா, புதுச்சேரி மாநில பொருப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொதுசெயலர் பழனிசாமி, நாகை மாவட்ட செயலர் விமல் , முத்துகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #ramadoss #thiruvarurelection

    Next Story
    ×