search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvarur election"

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    பழனி:

    பழனியில் அ.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவரது மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி பேசி வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் வடமா நிலத்திற்கு சென்று இந்தியில் பேசுகிறார். எனவே மொழிப் போர் தியாகிகளுக்காக தி.மு.க. கூட்டம் நடத்துவது வேதனையான செயல்.


    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பார்த்து இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயங்காது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்த அரசை கலைக்க நினைக்கும் ஸ்டாலின், தினகரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி வருகிறார். தரையில் அமர்ந்தாலும், உருண்டு புரண்டாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.


    சசிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சசிகலாவால் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து பல கோடி சொத்துக்களை கொள்ளையடித்தார். தற்போது அந்த பணத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது முதல்வர் கனவு பலிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    ஜெயலலிதா மரணம் குறித்து பதில் சொல்ல முடியாதவர்கள் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி வருவதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். #MinisterCVshanmugam
    திண்டிவனம்:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 10-ந் தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர்தொகுதி இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    இன்று காலை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதே?

    பதில்: திருவாரூர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சகஜநிலை திரும்பியபிறகு தேர்தல் நடந்தால் நல்லதுதான்.

    திருவாரூரில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    கேள்வி: பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்குமா?

    பதில்: அவ்வாறு நடந்தாலும் நல்லதுதான்.

    கேள்வி: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தீர்களே?


    பதில்: அம்மாவின் மரணம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.

    இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எதனை பற்றியும் கேட்கும் உரிமை உண்டு. இது பெரியார் பிறந்த மண். இது ஹிட்லர் நாடு அல்ல.

    ஆனால் தேவையின்றி அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் என்று பேசுவது தவறு. அம்மா வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர்கள், அம்மா மரணத்துக்கு காரணமான தினகரன் குடும்பத்தினர் இன்று வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.

    தினகரன் உல்லாச விடுதியில் இருந்து போதையில் பேசுவதுபோல் பேசி வருகின்றார். அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைப்பது தவறு. தினகரன் இதோடு நிறுத்தி கொள்ளவேண்டும்.

    அதுபோலவே அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் எனக்கு தோன்றிய சந்தேகங்களை தெரிவித்திருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterCVshanmugam
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkaramaj

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் என்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தர்ராஜ், நகர்மன்ற துணை தலைவர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே கனவுகளுடன் இருந்து வருகிறார்.

    ஏழைக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.

    முதல்-அமைச்சர் மீது தி.மு.க. போடப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.- டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொண்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜிஆர், மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் (மேற்கு) தமிழ் கண்ணன் (கிழக்கு) கோட்டூர் ஜீவானந்தம் (தெற்கு), ராஜா சேட் (வடக்கு), நீடாமங்கலம் அரிகிஷ்ணன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார். #ministerkaramaj

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். #DMK #Jawahirullah
    திருச்சி:

    மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

    மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK  #Jawahirullah
    திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் அதனை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அதிமுக, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குசாவடி முகவர் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதன்படி கொரடாச்சேரி நகர, ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உ.மதிவாணன், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தாழை அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசும்போது கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியானது தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் தொகுதியாகும். திருவாரூர் தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பயன்தர தக்க பணிகளை தலைவர் கருணாநிதி செய்துள்ளார். வரவுள்ள இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எப்போது தேர்தல் அறிவித்தாலும் வெற்றியை எளிதாக பெறும் வகையில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விடவேண்டும். வாக்குசாவடி முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்காளர்களை சந்தித்து நமது வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #thiruvarurelection #dmk

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்ட விழாவிற்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அ.ம.மு.க. பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். தொண்டர்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் நல்லது. ஆனால் பாராளுமன்ற தேர்தலோடு தான் நடத்துவார்கள்.


    ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என விசாரணை கமி‌ஷன் அமைத்தனர். 1 வருடம் ஆகியும் விசாரணை நிறைவு பெறவில்லை. இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. டெபாசிட் காலியாகும்.

    இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டுள்ளோம். அது இல்லை என்றால் பேனா, தொப்பி உள்பட எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விரும்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரை வந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின் பாசி‌ஷ பா.ஜ.க ஒழிக என்று கூறுகிறார். அவரது கட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை அடாவடி செய்து வருகிறார்கள்.

    பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும்.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

    ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடி உள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

    இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்பி விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து கருத்துகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு பேசியபோது கூறியதாவது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த திமுக தலைவரை தமிழகத்தில் அதில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தொகுதி, எனவே இடைத்தேர்தலில் அயராது பாடுபட்டு எந்த தயக்கமின்றி நேர்மையாக சந்தித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க பாடுபடுவோம் என தெரிவித்தார். #thiruvarurelection #dmk

    அ.தி.மு.க. அரசை காத்து செயல்பட இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

    பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்வின் மூலம் ஆற்றிய பணிகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கினை மாற்றியதோடு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அவற்றைப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்தியப் பண்பாடு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளப்படவும் காரணமாக அமைந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    இந்தியத் திருநாடு வலுப்பெற்றும், பொருளாதார வளம் பெற்றும் உயர்ந்திட வேண்டுமானால், இந்நாட்டின் மாநிலங்கள் வலிமை பெறவேண்டும்; மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும்.

    ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பனவற்றை எல்லாம் எடுத்துரைத்து, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்த மாமேதை பேரறிஞர் அண்ணா.

    மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தோன்றி, மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும், அதன் காரணமாக அந்தந்த மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, நாகரீகம், புத்துயிர் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    ஓய்வறியா கடும் உழைப்பால், அறிவுத்திறத்தால் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக் காட்ட முடிந்தது.

    அதன் தொடர்ச்சியாக, புரட்சித் தலைவி அம்மா அமைத்துத் தந்த கழக அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

    நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்கள்.

    அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ``அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் திருப்பெயரை இணைத்தார்கள். பேரறிஞர் அண்ணா காண விரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் புரட்சித் தலைவி அம்மா.

    பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்த மக்கள் நலப் பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் புரட்சித் தலைவி அம்மா.

    தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் வகுத்தளித்த பாதையில் கழக அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் அரும் பணிகளையும், சாதனைகளையும், சிறப்புடன் நினைவுகூர்ந்து, அவருக்கு ``பாரத் ரத்னா’’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இது குறித்து பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


    பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரது வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் தொண்டாற்றுவதற்கு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, கழக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் புகழ் காப்போம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்போம்; புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி மேல் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.  #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களாக இருக்கின்றன.

    இவர்களின் ஊழல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் காலம் விரைவில் வரும்.

    அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது.

    இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். யாருடைய பிளஸ்சிங்கோ அவருக்கு இருப்பதாக நினைக்கிறார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.

    அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த ஆட்சியின் முடிவின் அறிகுறியாக இந்த மின்வெட்டு உள்ளது.


    இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையற்ற திட்டம். மக்கள் விரும்பாத திட்டம். மலைகள், நீராதாரங்கள், இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    இப்போது அந்த திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.

    ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்.

    கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகிறார்கள். அதற்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசாகவே எடப்பாடி-பன்னீர் செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை.

    இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.

    எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கு தான் மற்றவர்கள் போட்டியிட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த 3 மாதங்களாக இந்த தொகுதிகளில் எங்கள் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் தேர்தல் பணி தான். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

    எனவே மத்திய அரசின் அடிமையாக உள்ள இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தமிழக மக்களுக்கும் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #thiruvarurelection

    மயிலாடுதுறை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள உயர்அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வழக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து வெளிகொண்டுவர வேண்டும். எனவே பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம் என்று கூறியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்மேலாண்மை குறித்து புரிதல் இன்னும் தேவை. மேலணை உடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழ் அணையின் உறுதி தன்மை குறித்து இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வும் நடத்தவில்லை. கீழணையில் போக்குவரத்தை முற்றிலும் தடைசெய்து போக்குவரத்தை மாற்றவேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    முல்லைப்பெரியாறு அணை திறந்ததால் கேரளாவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால்தான் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பிறமாநிலங்களை விட தமிழகம்தான் அதிக அளவில் உதவி செய்து வருகிறது. இருமாநில மக்களிடம் உள்ள நல்உறவை கேரளஅரசு பிளவுபடுத்தக்கூடாது. முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து தொடர்ந்து 142 அடி நீர்தேக்குவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்று அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாமக மாநில தலைவர் கோ.க.மணி, மாநிலப் பொருளாளர் திலகபிரபா, புதுச்சேரி மாநில பொருப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொதுசெயலர் பழனிசாமி, நாகை மாவட்ட செயலர் விமல் , முத்துகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #ramadoss #thiruvarurelection

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பாலான அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த செயற்குழு வெறுமனே சம்பிரதாயத்துக்கு நடத்தி முடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு புதிய உயிரும், புத்துணர்ச்சியும் அளிக்கப்பட வேண்டுமானால் சில முக்கிய முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அடுத்த வாரம் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.டி.வி.தினகரன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

    அது போல கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இத்தனை பரபரப்புக்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட அத்தனை வி‌ஷயங்களையும் அ.தி.மு.க.வால் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. இதனால்தான் நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அ.தி.மு.க.வுக்கு தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அ.தி.மு.க.வில் எத்தகைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே பாணியை கடைபிடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2013-ம் ஆண்டே பூத் கமிட்டியை ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். அதனால்தான் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வால் 99 சதவீத வெற்றியை பெற முடிந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் எந்தவித முன் ஏற்பாடும் தயார் செய்யப்படவில்லை என்று வேதனையோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியை தழுவ நேரிட்டால், அ.தி.மு.க. மீதான மதிப்பு மக்கள் மத்தியில் வீழ்ச்சி அடைய தொடங்கி விடும் அபாயம் உள்ளது. செயற்குழுவில் இது பற்றி விவாதித்து புதிய யுத்தியை கையாள முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடைத்தேர்தலுக்கும் டி.டி.வி.தினகரன் ஓசையின்றி தயாராகிவிட்டார். வேட்பாளரை கூட அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. மாறாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை உடனுக்குடன் செய்ய வழிகாட்டுதல் குழு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை.

    இதனால் மாவட்டங்களில் அ.தி.மு.க. பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் உள்ளன. திருவள்ளூரை 3 மாவட்டமாகவும், வேலூரை 4 மாவட்டமாகவும் மாற்றி தி.மு.க. மேலிடம் நிர்வாகிகளை நியமித்துள்ளது. அது போல அ.தி.மு.க.விலும் கூடுதல் மாவட்ட நிர்வாகங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


    மேலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் 2 அல்லது 3 பதவிகளை வகித்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    இப்படி மற்ற மூத்த தலைவர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடம் பல பதவிகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.

    கட்சியில் நன்கு செயல்பட கூடியவர்களில் பலர் பொறுப்புகள் இல்லாமல் உள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பதவி தரப்படாததால் விரக்தி அடைந்துள்ளனர்.

    இத்தகைய விரக்தியான நிலையில் உள்ளவர்கள்தான் டி.டி.வி.தினகரனின் புதிய கட்சிக்கு தாவுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நாளைய அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகத்துக்கான அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    ×