search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்- அ.தி.மு.க. செயற்குழுவில் நாளை ஆலோசனை
    X

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்- அ.தி.மு.க. செயற்குழுவில் நாளை ஆலோசனை

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பாலான அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த செயற்குழு வெறுமனே சம்பிரதாயத்துக்கு நடத்தி முடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு புதிய உயிரும், புத்துணர்ச்சியும் அளிக்கப்பட வேண்டுமானால் சில முக்கிய முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அடுத்த வாரம் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.டி.வி.தினகரன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

    அது போல கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இத்தனை பரபரப்புக்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட அத்தனை வி‌ஷயங்களையும் அ.தி.மு.க.வால் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. இதனால்தான் நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அ.தி.மு.க.வுக்கு தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அ.தி.மு.க.வில் எத்தகைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே பாணியை கடைபிடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2013-ம் ஆண்டே பூத் கமிட்டியை ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். அதனால்தான் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வால் 99 சதவீத வெற்றியை பெற முடிந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் எந்தவித முன் ஏற்பாடும் தயார் செய்யப்படவில்லை என்று வேதனையோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியை தழுவ நேரிட்டால், அ.தி.மு.க. மீதான மதிப்பு மக்கள் மத்தியில் வீழ்ச்சி அடைய தொடங்கி விடும் அபாயம் உள்ளது. செயற்குழுவில் இது பற்றி விவாதித்து புதிய யுத்தியை கையாள முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடைத்தேர்தலுக்கும் டி.டி.வி.தினகரன் ஓசையின்றி தயாராகிவிட்டார். வேட்பாளரை கூட அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. மாறாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை உடனுக்குடன் செய்ய வழிகாட்டுதல் குழு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை.

    இதனால் மாவட்டங்களில் அ.தி.மு.க. பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் உள்ளன. திருவள்ளூரை 3 மாவட்டமாகவும், வேலூரை 4 மாவட்டமாகவும் மாற்றி தி.மு.க. மேலிடம் நிர்வாகிகளை நியமித்துள்ளது. அது போல அ.தி.மு.க.விலும் கூடுதல் மாவட்ட நிர்வாகங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


    மேலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் 2 அல்லது 3 பதவிகளை வகித்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    இப்படி மற்ற மூத்த தலைவர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடம் பல பதவிகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.

    கட்சியில் நன்கு செயல்பட கூடியவர்களில் பலர் பொறுப்புகள் இல்லாமல் உள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பதவி தரப்படாததால் விரக்தி அடைந்துள்ளனர்.

    இத்தகைய விரக்தியான நிலையில் உள்ளவர்கள்தான் டி.டி.வி.தினகரனின் புதிய கட்சிக்கு தாவுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நாளைய அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகத்துக்கான அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×