search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
    X

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

    கறம்பக்குடி அருகே சூரக்காட்டில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சாந்தம்பட்டி, தெற்குபல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 4 சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மின்மாற்றியை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சூரக்காட்டில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெட்டன்விடுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மகாதேவராஜ், மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றியை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×