search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிக்கு எதிராக களம் இறங்கும் கமல்ஹாசன்
    X

    ரஜினிக்கு எதிராக களம் இறங்கும் கமல்ஹாசன்

    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கி விட்டனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்க வைத்து அரசியலில் குதித்த ரஜினியும், என் பணி நடிப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்து திடீரென அரசியல் களம் கண்ட கமலும் தனித்தனி பாதையில் பயணித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை குறி வைத்தே வெற்றிக் கோட்டையை பிடிக்க இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக தங்களது ரசிகர் பலத்துடன் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினியோடு பல்வேறு வி‌ஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களையே கமல் கொண்டுள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியலில் தொடங்கி மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது வரையில் ரஜினியின் கருத்தோடு கமல் ஒத்துப்போகவே இல்லை. இருவரின் பார்வையும் வேறு மாதிரியே இருந்து வந்துள்ளது. மாணவர்கள் அரசியலில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்துக்கு நேர்மாறாக கமலின் எண்ணம் இருந்தது. மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுபோன்று பல்வேறு வி‌ஷயங்களில் இருவரின் கருத்துக்களும் முரண்பாடாகவே இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதே பிரச்சனைக்கு காரணம். போலீசாரை தாக்குவதை எதிர்ப்பேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்றும் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ரஜினியின் இந்த கருத்துக்கும் கமலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்று கூறிய கமல் தூத்துக்குடி போராட்டம் நல்ல பாதை என்றும், துப்பாக்கியே வந்தாலும் அதனை திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவத்தை தூத்துக்குடியில் பார்த்தோம்.

    தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினியின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அவர் கூறியது அவரது கருத்து. நான் மக்கள் பிரதிநிதியாகவே அவர்களது கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். மக்களிடம் கேட்டுதான் ஒட்டு மொத்த மக்களிடம் கருத்தாக நான் எதிரொலித்தேன். நானாக எந்த கருத்தையும் கூறவில்லை.

    போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது ரஜினியின் கருத்து. எனது கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததில்லை. அவர் இறந்த பிறகுதான் பிறந்தேன் போராட்டத்தின் தன்மை என்ன என்பதை காந்தியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து போராடுவது போராட்டம் அல்ல.

    போராட்டத்தில் வன்முறை இருந்தால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.

    இதன் மூலம் ரஜினிக்கு எதிரான அரசியல் பயணத்தை கமல் ஒருபடி மேலே சென்று எதிர்க்க திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. அரசியலில் எதிராளிகளை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான பலவீனங்களை தங்களது பலமாக மாற்றிக்கொள்வதே வலு சேர்க்கும். அந்த வழியைத் தான் கமலும் பின்பற்றுகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் களத்தில் ரஜினி, கமல் ஆகிய 2 குதிரைகளும் போட்டி போட்டு வேகம் காட்டி வருகின்றன. இதில் முந்தப் போகும் குதிரை எது? கால் இடறி விழப்போகும் குதிரை எது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். #KamalHaasan #Rajinikanth
    Next Story
    ×