search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
    X

    பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

    பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை தலைமை ஆசிரியர் உள்பட 15 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #TRBScam
    சென்னை:

    தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வை நடத்தியது.

    அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்வு எழுதியவர்களில் ஒருவரான விஜயானந்த் என்பவர் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர் புகார் தெரிவிக்கும் பிரிவிலும் புகார் கொடுத்ததால், இந்த முறைகேடு விவகாரம் சூடு பிடித்தது.

    இதற்கிடையே சங்கர் என்பவரும் புகார் அளித்தார். அதில் அவர், "பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு எழுதியவர்களிடம் ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டுள்ளன" என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களில் 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.


    196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் ஊழலுடன் நடந்த இந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் மிகப்பெரிய சதி கும்பல் இருப்பதையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

    பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இதில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் டெல்லி நிறுவனத்தை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை ஒவ்வொருவராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 4 மாத தேடுதல் வேட்டையின் காரணமாக ஒரு தலைமை ஆசிரியர், தொடக்கக்கல்வி துறை இளநிலை உதவியாளர், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கேண்டீன் உரிமையாளர், கால்டாக்சி டிரைவர் உள்பட 15 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள்.

    இவர்கள் அனைவரையும் சுப்பிரமணி என்பவர் ஒருங்கிணைத்து இந்த முறைகேட்டை செய்துள்ளார். முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதும் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில், ‘பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளி சுப்பிரமணி மட்டும் இன்னும் பிடிபடவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.

    இந்த முறைகேட்டில் நிறைய பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    எனவே இந்த முறைகேட்டில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறைகேடுகளை செய்தவர்கள் சுமார் ரூ.50 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. #Tamilnews
    Next Story
    ×