search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ மீது சோடா பாட்டில் வீச்சு: கி.வீரமணி கண்டனம்
    X

    வைகோ மீது சோடா பாட்டில் வீச்சு: கி.வீரமணி கண்டனம்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த போது அவர்மீது சோடா பாட்டில் வீசப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வாகன சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், குளத்தூரில் அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி சோடா பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன்பும், தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் மதுரையருகே அவரைத் தாக்க முயன்றுள்ளனர். தொடர்ந்து அவர்மீது குறி வைப்பவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? இவற்றுக்கு யார் காரணமானாலும், இந்தக் கோழைத்தனமான வன்முறையைக் கண்டிக்கிறோம்.

    கடந்த 15-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடந்தபோது, 20 பேர் கூட்டத்தில் புகுந்து, நாற்காலிகளை உடைத்துக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தப் பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் காலித்தனத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால், காலித்தனத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் காவல்துறையின் லட்சணம் இதுதானா?.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×