search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    நாமக்கல் மாவட்டத்தில் ரெயில் மறியல் போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்செங்கோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் திருச்செங்கோடு அருகே உள்ள ஆனங்கூர் ரெயில் நிலையத்தில் ஈரோடு- ஜோலார்பேட்டை வழியாக சென்ற பயணிகள் ரெயிலை வழிமறித்து என்ஜின் முன்பக்கத்தில் ஏறியும், கட்சி கொடிகளுடன் தண்டவாளத்தில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் சுகந்தி மணியம், இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாணவர் அணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், விவசாய அணி அமைப்பாளர் மொளசி ராஜமாணிக்கம் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பயணிகள் ரெயில் செல்வதற்கு வழிவிடாமல் அவர்கள் அமைத்திடு அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி நீண்ட நேரமாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமாதான பேசினார்கள். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ரெயில் சுமார் ½ மணி நேரம் கழித்து தாமதமாக புறப்பட்டு சென்றது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

    அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராசிபுரத்தில் ரெயில் மறியல் போராட்டம் இன்று காலையில் நடந்தது. ரெயில் நிலையம் அருகிலுள்ள காளியம்மன் கோவிலில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது ரெயில் மறியல் போராட்டம் செய்ய போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.

         ராசிபுரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்


    இதனால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதிக்காததை கண்டித்து அவர்கள் சாலை மறியல் செய்ய புறப்பட்டனர். அப்போது அவர்களை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன் (எலச்சிபாளையம்), கோவிந்தசாமி (வெண்ணந்தூர்), வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் ஜெயபால், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், எலச்சிபாளையம் ஒன்றியக்குழு ஆனந்தன், மங்களபுரம் கிளை செயலாளர் பானுமதி உள்பட 21 பேர்களை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ரோட்டரி ஹாலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    Next Story
    ×