search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழக அரசு காவிரி நதிநீர் ஆணையம் வேண்டும் என்று கேட்கிறதே தவிற உள்ளுக்குள் அவர்கள் அதை அதிகம் விரும்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது.

    இதில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி வி‌ஷயத்தில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் முதல் குற்றாவளி. காவிரி பிரச்சினையில் வே‌ஷம் போட்டு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு தமிழக மக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின் தான் அதற்கு முழு பொறுப்பு.

    காங்கிரஸ், தி.மு.க.வால் காவிரி உரிமை மறுக்கப்பட்டது. பதவி சுகத்தால் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்தவர் ஸ்டாலின் என நான் நேரடியாக குற்றம் சாட்டுகிறேன்.

    நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ நடத்திய நடைபயணத்தில் ரவி என்பவர் தீக்குளித்தற்கு ஸ்டாலின், வைகோவை கைது செய்ய வேண்டும், ரவி வலியால் அலறி துடித்த போது நியூட்ரினோ திட்டத்தை ரவி எதிர்ப்பதாக வைகோ கூறுகிறார்.

    காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சொல்வதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். உண்மையிலேயே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பா.ஜனதாவால் மட்டுமே பெற்று தர முடியும். காவிரிக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதை பற்றி பரிசீலிப்போம் என தம்பிதுரை துணிச்சலாக கூறி உள்ளார்.

    தமிழக அரசு காவிரி நதிநீர் ஆணையம் வேண்டும் என்று கேட்கிறதே தவிற உள்ளுக்குள் அவர்கள் அதை அதிகம் விரும்பவில்லை. வெளியே பொய் முகத்தை காண்பித்து வருகின்றனர். மத்திய அரசு நிரந்தர தீர்வுக்காக தான் சில வாரங்கள் அவகாசம் கேட்கிறது.



    தமிழகத்தில் 10 ஆயிரம் கோடியில் சாலை வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.28 ஆயிரம் கோடியில் துறைமுகம், 1 லட்சம் கோடியில் நீர் நிலை திட்டங்கள் வர உள்ளது.

    தற்கொலை செய்வதும், ராஜினாமா செய்வதும் எடுபடாது, யாருடைய போராட்டத்தாலும் தமிழகத்திற்கு காவிரியை கொண்டு வர முடியாது. எங்கள் மீது எவ்வளவு விமர்சனத்தை வைத்தாலும் இறுதியில் காவிரியை கொண்டு வரப்போவது பா.ஜனதா தான்.

    பா.ஜனதா சார்பில் ஒரு குழு அமைத்து அந்த குழு மூலம் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு 4 மாநிலங்களையும் ஒப்புக்கொள்ள வைத்து காவிரி நதி நீர் ஆணையமோ அல்லது வேறு ஒன்றோ? அது தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் பெற்று தருவதாக இருக்கும்.

    ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி நாம் ஆட்சிக்கு வந்து விடலாமா ? என்று ஸ்டாலின் நினைக்கிறார். தி.மு.க., காங்கிரசுடன் வைகோ இருக்கும் வரை எங்களது வெற்றி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1974-ல் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கை தங்களது சுயலாபத்திற்காக வாபஸ் வாங்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அதேபோல 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தது. காவிரி மீது கவனம் செலுத்தாததற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

    கர்நாடகாவில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், மிகப்பெரிய பிரச்சினை வரும். அதற்கு பா.ஜனதா தான் பொறுப்பு என்கிறார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார்.



    அவர் அண்ணா, பெரியார் வழியில் நடக்கிறாரா என பார்த்தோம். ஆனால் அவர் அ.தி.மு.க. வழியில் தான் நடக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் என்றால் மாநிலங்களில் உள்ள அணைகள் முழுவதும் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். தமிழகமே இதற்கு ஒத்துகொள்ளாது.

    காவிரி விவகாரத்தில் கொடுக்கப்படும் தீர்வு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகா மேல்முறையீடு செய்யும். அதற்காக பா.ஜனதா நிரந்தர தீர்வு காண வேண்டும் என நினைக்கிறது. தெளிவான இலக்கை நோக்கி பா.ஜனதா சென்று கொண்டிருக்கிறது. இதை விரும்பாமல், இதற்கு தீர்வு கொண்டு வந்துவிட கூடாது என்பதற்காக ஸ்டாலின் சூழ்ச்சி செய்கிறார்.

    ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு கமல் தூத்துக்குடிக்கும், நியூட்ரினோ பிரச்சினைக்கு வைகோ நடைபயணம் என தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கவே நினைக்கின்றனர். பா.ஜனதா தமிழகத்தை அமைதி பூங்காவாக, வளர்ச்சி திட்டங்கள் நோக்கி செயல்படுத்த நினைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×