search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் ஆய்வு செய்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறினார்- மு.க. ஸ்டாலின்
    X

    தமிழகத்தில் ஆய்வு செய்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறினார்- மு.க. ஸ்டாலின்

    தமிழகத்தில் ஆய்வு செய்வதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #BanwarilalPurohit
    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முனைவர் சூரிய நாராயண சாஸ்திரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநரே பல்கலைக்கழக சட்டத்தை மீறியிருப்பது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. அதிலும் திமுக ஆட்சியின்போது இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான சூரிய நாராயண சாஸ்திரியை அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது, “சட்டத்தின் ஆட்சியை மீறிய எதேச்சாதிகாரமான நடவடிக்கையாக அமைந்துஆளுநரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

    சட்டப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் எண்ணற்ற இளைஞர்கள்தான் இந்த நாட்டின் நீதிபதிகளாகவும், பிரபல வழக்கறிஞர்களாகவும் உருவாகிறார்கள். அப்படிப்பட்ட புகழ்மிக்க ஒரு பல்கலைக்கழகத்திலேயே, ‘ஒழுங்கு நடவடிக்கைக்கு’ உள்ளானவரை, சங் பரிவார் நிழலில் வாழ்ந்து வந்த ஒருவரை, துணைவேந்தராக நியமிப்பது சட்டத்தின் ஆட்சி மீது பெருத்த அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என திமுக தெரிவித்தது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அழைத்து ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனையை மேற்கொண்டார்.

    இதனையடுத்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு இல்லை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார் என மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் பேசுகையில், அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம் தவறானது என அரசியல் கட்சிகள், அமைப்புகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி என்ற முறையில் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தது அறிக்கை வெளியிட்டது. தனிப்பட்ட முறையில் தவறு என ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். அதுகுறித்து என்னிடம் ஆலோசிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் பன்வாரிலால், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி உள்பட மூன்று பேரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

    பரிந்துரையின்படியே பெயர் தேர்வு செயது, நியமனம் செய்து உள்ளேன். அதில் தவறு கிடையாது என வாதிட்டார். அப்போது நாங்கள் சூர்ய நாராயண சாஸ்திரி மீது புகார்கள் உள்ளது, அவர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என வாதிட்டோம். அதற்கு ஆளுநர் நடவடிக்கை உண்மைதான், ஆனால் அது தொடர்பான விசாரணையில் தவறு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில்தான் அவர் நியமனம் செய்யப்பட்டது என்றார். எங்கள் தரப்பில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டது என்றார்.

    மேலும் ஸ்டாலின் பேசுகையில் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருக்கும் நிலையில், சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக ஆய்வு செய்யவது முறையா? என ஆளுநரிடம் கேள்வியை எழுப்பினோம். இதனால்தான் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் மேற்கொண்டு வருகிறோம் என்றோம். ஆளுநர் பதில் அளிக்கையில், ஆய்வு பணியை மேற்கொள்ளவில்லை, வளர்ச்சியை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் செய்கிறேன் என்றார். அப்போது அதிமுக ஆட்சி இல்லையென்றால் ஆய்வு செய்யுங்கள், ஆனால் ஆட்சி ஒன்று நடக்கும் போது ஆய்வு எப்படி செய்யலாம் என கேள்வியை எழுப்பினோம். இதுதொடர்பாக அழுத்தமாக கேள்வி எழுப்பட்ட போது, ஆய்வு செய்வதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×