search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் மீனவர்கள் 31-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு
    X

    ராமேசுவரம் மீனவர்கள் 31-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வரும் 31-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை படகுகளுடன் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 184 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு அங்குள்ள கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    பாதுகாப்பற்ற முறையில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 50 சதவீதத்துக்கும் மேலாக சேதம் அடைந்துள்ளன.

    மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இன்று அனைத்து மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் சேசு இருதயம் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மீனவர்கள் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி, சேசு மற்றும் ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இலங்கை சிறையில் உள்ள 27 தமிழக மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 184 விசைப்படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் குந்துகாலில் மீன்பிடி துறைமுக பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×