search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

    எங்களைப் பொறுத்த வரை ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Natarajan
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மிகவும் தெளிவானவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது. யாரை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.

    தமிழக மக்கள் குழந்தைகள் அல்ல. அவர்களை கிலுகிலுப்பை காட்டி ஏமாற்ற முடியாது.

    தேர்தல் நேரத்தில் மக்களிடம் உற்ற நண்பர்களாக யார் இருக்கிறார்கள், விரோதிகளாக யார் இருக்கிறார்கள் என்பதை பகுத்து உணர்ந்து ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் வாக்காளர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

    எங்களை பொறுத்தவரை அம்மாவின் அரசை தொடர்ந்து நடத்தி அவரது வாக்குறுதிகள், கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வேண்டும், கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் அம்மாவின் அரசு சிம்மசொப்பனமாகத்தான் விளங்கும்.

    எங்களை பொறுத்தவரை தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே அந்த அடிப்படையில் அம்மாவின் திட்டங்கள் கனவுகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றுவோம் பொது மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

    கேள்வி:- நடராஜன் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆளும் கட்சியில் இருந்து யாரும் இரங்கல் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று சீமான் கூறி இருக்கிறாரே?

    ப:- இதற்கும் மனிதாபிமானத்துக்கும் சம்பந்தம் கிடையாது. எங்களைப் பொறுத்த வரை ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஒரு முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் எப்படி போய் மரியாதை செலுத்த முடியும். அதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


    கிளைக் கழகத்தில் இருந்து தலைமைக் கழகம் வரை அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த அடிப்படையில் அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் நாங்கள் இருக்க முடியுமே தவிர இவர்களுக்காக எங்களின் நிலையை மாற்றிக் கொள்ள முடியாது.

    அம்மாவே ஒதுக்கி வைத்த ஒரு குடும்பத்தை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். உங்கள் கேள்வியே தப்பு. ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிறபோது அவர் எப்படி இந்த கேள்வியை எங்களிடம் கேட்க முடியும். அவருக்கு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். நாளை அவர்கள் உதவி தேவை என்றால் அவர்கள் போகலாம். எங்களுக்கு எந்த உதவியும், அவர்கள் தரப்பிலிருந்து, அந்த குடும்பத்தின் தரப்பிலிருந்து தேவையில்லை. அந்த குடும்பத்தை முழுமையாக நிராகரித்து நாங்கள் போகும் போது இந்த கேள்வியே தேவை இல்லாதது.

    கே:- ராம ராஜ்ஜியம் ரத யாத்திரையால் பதட்டம் ஏற்பட்டுள்ளதே?

    ப :- கேரளாவில் ரத யாத்திரை வந்து போனதே தெரியவில்லை. கர்நாடகாவிலும் வந்து போனதே தெரியவில்லை. இப்போது இவ்வளவு விளம்பரம் யாரால் வந்தது. ரத யாத்திரையை முழுமையாக பிரபலப்படுத்தி இருப்பது தி.மு.க.வும், போராட்டம் நடத்தியவர்களும் தான். இதை கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும். ரதம் வந்தாலும் யாரும் மாறமாட்டார்கள். விரும்பிய கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள். எங்களுக்கு 55 சதவீதம் ஓட்டு உள்ளது. எங்கள் ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும். தி.மு.க. ஓட்டு 30 சதவீதம் உள்ளது. இது அவர்களுக்கு தான் கிடைக்கும். அதேபோல் 5 சதவீதம், 3 சதவீதம், 2 சதவீதம் என யாருக்கு ஓட்டு இருக்கிறதோ அது அவரவர்களுக்கு தான் கிடைக்கும்.

    கே:- உள்ளாட்சி தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும்?

    ப:- இது கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி அதில் செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×