search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியை மாற்றி அமைக்க கோரி தமிழகத்தில் 8-ந்தேதி கடைகள் அடைப்பு: விக்கிரமராஜா அறிவிப்பு
    X

    ஜி.எஸ்.டி. வரியை மாற்றி அமைக்க கோரி தமிழகத்தில் 8-ந்தேதி கடைகள் அடைப்பு: விக்கிரமராஜா அறிவிப்பு

    ஜி.எஸ்.டி. வரியை மாற்றி அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை முழுமையாக மாற்றி அமைக்க கோரி மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மருந்து வணிகர்கள் சங்கம், மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், அயன்புரம் வியாபாரிகள் சங்கம், தென்சென்னை மேற்கு மற்றும் கிழக்கு உள்பட அனைத்து மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-

    மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரியால் சாதாரண சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைத்தால்தான் வணிகர்களால் வியாபாரம் செய்ய முடியும்.

    இப்போது அனைத்து வியாபாரிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் தான் தமிழகம் தழுவிய அளவில் மத்திய - மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

    இங்கு பொதுமக்கள் குடிநீரின்றி கஷ்டப்படுகிறார்கள். ஆனால் தனியார் விற்கும் தண்ணீர் பாட்டிலுக்கு 18 சதவீத வரி போடப்பட்டுள்ளது.

    160 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி அமலில் உள்ளது. இதில் 28 சதவீத வரி இந்தியாவில் மட்டும் தான் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு மாநில அரசும் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

    எனவே ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    அடுத்த கட்டமாக தென் மாநிலங்கள் அளவில் கடை அடைப்பு நடத்தப்படும். அதன் பிறகு இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கோவிந்த ராஜுலு, மண்டல தலைவர்கள் சதக்கத்துல்லா, ஆம்பூர் கிருஷ்ணன், வைத்திலிங்கம், புதுவை சிவசங்கர், வி.பி. மணி, பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதி லிங்கம், என்.பி.மோகன், அமல்ராஜ், சாமுவேல், ரவி, ஆதிகுருசாமி, மே.பால், கொரட்டூர் ராமசந்திரன், சேக்முகைதீன், வினோத் பாபு, மாரியப்பன், அன்னை சங்கர், அம்பத்தூர் ஹாஜி முகமது, முகமது செரீப், பூவைகந்தன், தேசிகன், சின்னவன், பூவை ஜெயக் குமார், அய்யார் பவன் அய்யாத்துரை, ஆர். கே.எம். துரைராஜன், மனோகரன், வேலுச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×