search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அதிரடி உத்தரவால் வாலிபரிடம் பணமோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு
    X

    கோர்ட்டு அதிரடி உத்தரவால் வாலிபரிடம் பணமோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு

    தர்மபுரி வாலிபரிடம் பணமோசடி செய்த 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி அந்தோணி காலனியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 25). அதேபகுதியில் உள்ள அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மெய்யரசன். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் மெய்யரசன் ஆன்லைனில் வியாபரம் செய்ய ரூ.1 லட்சம் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லாபம் பெறலாம் என்று கவுதமிடம் கூறினார். இதனை நம்பிய கவுதம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார்.

    பின்னர் இதுகுறித்து கவுதம் தனது நண்பர்கள் 10 பேரிடம் தெரிவித்து அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சம் வரை பணத்தை பெற்று மெய்யரசன் மற்றும் அவரது நண்பர்கள் வீரமணி, தனசேகரன், சுப்பரமணி ஆகியோரிடம் கடந்த வருடம் ஜூலை மாதம் வழங்கினார்.

    சில நாட்கள் கழித்து கவுதம் தனக்கு மாதந்தோறும் கிடைக்கக்கூடிய லாப பணத்தை மெய்யரசனிடம் சென்று கேட்டார். ஆனால் லாப பணத்தை தருவதற்கு அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவுதம் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெய்யரசன் விபத்தில் இறந்து விட்டார். இதனால் தனது பணமும், நண்பர்கள் பணமும் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணிய கவுதம் ஐகோர்ட்டில் பணமோசடி குறித்து வழக்கு தொடர்ந்தார்.

    இந்தவழக்கு விசாரணைக்கு வந்து அதனை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் வியாபாரம் செய்து லாப பணம் தருவதாக கூறி ஏமாற்றிய மெய்யரசன் இறந்து விட்டதால் அவரை தவிர்த்து அவரது நண்பர்கள் 3 வாலிபர்கள் மீது தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதையடுத்து பண மோசடி செய்த வீரமணி, தனசேகரன், சுப்பிரமணி ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×