search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்: பாரம்பரிய வழக்கப்படி வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு
    X

    திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்: பாரம்பரிய வழக்கப்படி வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் இழுக்க பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேரை அரிச்சந்திர மகாராஜா தனது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த தேரில் ஏராளமான சிற்பங்கள இருந்த போதிலும் ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்தது போன்று அரிய சிற்பம் இருப்பது தான் விசேஷமாக உள்ளது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடையாளமாக அந்த சிற்பம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் தராசு பிடித்திருப்பதால் திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைக்கிறார்கள். இத்தகைய பல நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட பெரிய தேரானது, ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் கிரிவலப் பாதையை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய வழக்கப்படி தேர் இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருங்குடி, பரம்புபட்டி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், தனக்கன்குளம், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கோவில் முதல் ஸ்தானிகர் சாமிநாதன் மற்றும் நாட்டாண்மை கணக்குப்பிள்ளை வைராவி மற்றும் காவல் மிராசுகள் சென்று அங்குள்ள கிராம நாட்டாண்மைகளிடம் திருவிழா அழைப்பிதழ் மற்றும் பணம், வெற்றிலை, பாக்கு வைத்து தேர் இழுக்க வாருங்கள் என்று பாரம்பரிய வழக்கப்படி அழைப்புவிடுத்தனர்.

    இதனையடுத்து கிராம நாட்டாண்மைகள் மூலம் அந்தந்த கிராமங்களில் தேர் இழுக்க வாருங்கள் என்று மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர் இழுக்க வருகை தரும் கிராம மக்களுக்கு தேர் நிலைக்கு வந்ததும் அந்தந்த கிராம நாட்டாண்மை சார்பில் தயிர்சாதம் வழங்கப்படும். மேலும் தேரோட்டம் முடிந்ததும் அன்று மாலை கிராம நாட்டாண்மைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை மரியாதை மற்றும் பரிவட்டம் வழங்கப்படும். இத்தகைய நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×