search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீர்த்தவாரியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்
    X

    தீர்த்தவாரியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்

    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும்.
    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்றும் ஒரே தலத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக இருப்பது என்பது மிக மிக அரிது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும். இங்கு மூர்த்திக்கு நிகரான சிறப்பு தீர்த்தங்களுக்கும் இருக்கிறது.

    திருவண்ணாமலையில் கிரிவல பாதையிலும், மலையின் பல்வேறு பகுதிகளிலும் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், மன்னர்கள் தங்களது தோஷங்களையும், பாவங்களையும் நீக்கிக் கொள்ள தனித்தனி தீர்த்தங்களை உருவாக்கி அதில் தினமும் நீராடி அண்ணாமலையாரை வழிபட்டு பலன்களை பெற்று உள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய தீர்த்தங்களில் நீராடினால் நமது தோஷங்களை நீக்கி பலன் பெற முடியும் என்பது ஐதீகமாகும். இதில் பக்தர்களுக்கு உதவும் வகையில் அண்ணாமலையாரும் புனித குளங்கள் மற்றும் நதிகளில் நீராடி அருள்பாலிப்பது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. இறைவனின் நீராடலே தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் குளங்கள், ஆறுகளில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளன.

    பொதுவாக ஆலயங்களில் உற்சவ விழாக்கள் நடக்கும்போது பத்தாவது நாளன்று உற்ச வரை புனித நீராட செய்வார்கள். இந்த தீர்த்தவாரி பெரும்பாலான ஆலயங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைதான் நடைபெறும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் ஆண்டுக்கு 7 உற்சவம் நடைபெறுவதால் அந்த 7 தடவையும் குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி மேற்கொள்கிறார்.

    ஆடிப்பூரம் உற்சவத்தின்போது சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கார்த்திகை தீப திருவிழா வின்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடத்துவார்கள். இதுதவிர சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களிலும் அண்ணாமலையார் ஆலயத்து உற்சவரான சந்திரசேகரர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவார். தைப் பூச விழாவின்போது அவர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வார்.

    திருவண்ணாமலை ஆலயம் அருகே உள்ள அய்யங் குளம், தாமரை குளம் ஆகியவற்றிலும் தீர்த்தவாரி நடத்தப்படுவது உண்டு. கோவில் குளங்களில் நடத்தப்படும் இந்த தீர்த்தவாரிகள் தவிர சந்திரசேகரர் திருவண்ணாமலை அருகே உள்ள ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் பங்கேற்கிறார். கலசப்பாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆறு, பள்ளிகொண்டாபட்டு கிராமத் தில் உள்ள கவுதம ஆறு ஆகிய ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் அருணாச லேஸ்வரர் கலந்து கொள்கிறார்.

    இந்த தீர்த்தவாரிகளில் மணலூர் பேட்டையில் நடக்கும் தீர்த்தவாரி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகையின் நிறைவாக ஆற்று திருவிழா நடத்துவார்கள். தென்பெண்ணை ஆறு தட்சிணாபினாகினி என போற்றப்படுகிறது. இந்த புண்ணிய நதியில் தை மாதம் முதல் நாளில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளும் கலப்பதாக ஐதீகம். அதாவது மற்ற நதிகள் அனைத்தும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள தை மாதம் முதல் 5 நாட்கள் தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் தென் பெண்ணை ஆற்றில் புனித நீராடினால் பல் வேறு பலன்களை பெற முடியும்.

    இதை கருத்தில் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிக்க திரு வண்ணாமலையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணலூர்பேட்டையில் உள்ள தென் பெண்ணை ஆற்றுக்கு அண்ணாமலையார் செல்கிறார். அவர் வருவதால் சப்தநதிகளும் அவரை தரிசிக்க வருகின்றன என்பது மரபாக உள்ளது. அண்ணாமலையார் புனித நீராடும்போது தாங்களும் நீராடினால் தங்களுடைய பாவங்களை, தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்ள முடியும் என்பது பக்தர்களிடம் நம்பிக்கையாக உள்ளது.

    பொதுவாக ஆறுகளின் எல்லையை சுவாமி கடப்பது இல்லை. அதற்கேற்ப அண்ணாமலையார் பல்வேறு கிராமங்கள் வழியாக மணலூர்பேட்டை செல்வார். அப்போது பக்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் திரண்டு நின்று மண்டகபடி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவார்கள். அண்ணாமலையார் தங்களது வீட்டுக்கே வந்து விட்டது போன்ற உணர்வுடன் கிராம மக்கள் இந்த மண்டகபடியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    தென்பெண்ணை ஆற்றுக்கு சென்ற பிறகு சந்திரசேகரர் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது நமச்சிவாய மந்திரங்களை பக்தர்கள் முழங்குவார்கள். இதையடுத்து சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஒரே இடத்தில் பல்வேறு ஆலயங்களின் சுவாமிகள் ஒன்றாக இருப்பது கோலாகலமாக இருக்கும். இந்த விழாவில்தான் அண்ணாமலையாரின் பிரதியான சந்திர சேகரர் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு இந்த தீர்த்தவாரி விழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை வரை அண்ணாமலையார் அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அடுத்து வருகிற 21-ந்தேதி (திங்கட் கிழமை) தைப்பூசம் தினத்தன்று சந்திர சேகரர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய குளத்துக்கு சென்று தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அன்று அதிகாலை ஆலயத்தின் அபிஷேகம் முடிந்ததும் மேளதாளத்துடன் அண்ணாமலையாரை ஈசானிய குளத்துக்கு அழைத்து செல் வார்கள். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். அருணாசலேஸ்வரர் சூலத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்று மாலைவரை அண்ணாமலையார் அந்த தீர்த்த கரையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதன்பிறகு ஆலயத்துக்கு அண்ணாமலையார் புறப்பட்டு வருவார். அறிவொளி பூங்கா அருகே வரும்போது பணியாளர் ஒருவர் வந்து வல்லாள மகாராஜா இறந்து விட்டார் என்ற தகவலை தெரிவிப்பார். இதனால் வேதனை கொள்ளும் அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் ஆலயத்துக்கு திரும்புவார். இது வல்லாள மகாராஜா மீது அண்ணா மலை யார் கொண்டுள்ள பாசத்தை வெளிப் படுத்துவதாக இருக்கும்.

    கோவில் வரலாற்றுபடி திருவண்ணாமலையை ஆண்டு வந்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை இல்லாததால் அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக இருந்து வந்தார். ஒரு தடவை போர்களத்தில் வல்லாள மகாராஜா நயவஞ்சகமாக கொல்லப்பட்டதும் அண்ணாமலையாரே அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாக குறிப்புகள் உள்ளன. இதை பிரதிபலிக்கும் வகையில்தான் ஈசானிய தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு திரும்பும் போது அண்ணாமலையாரிடம் வல்லாள மகாராஜா மரண செய்தி தெரிவிக்கப்படுகிறது. அதை கேட்டதும் மேளதாளம் இல்லாமல் அண்ணாமலையார் ஆலயம் திரும்புகிறார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திரு வண்ணாமலையில் நடத்தப்பட்டு வருகிறது.

    தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதும் தனித்துவம் வாய்ந்தது. கலசப்பாக்கத்தில் திருமா முடீஸ்வரரர் ஆலயம் உள்ளது. அங்கு இறைவனின் முடி இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஒரு தடவை கலசம் ஒன்று மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கலசத்தை இறைவனே அனுப்பி வைத்ததாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். இதையடுத்து அந்த கலசத்தை எடுத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊர் கலசப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதி செய்யாற்றுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இந்த ஆறுக்கு சேயாறு என்ற பெயரும் உண்டு. இது முருகப்பெருமான் உருவாக்கிய ஆறு ஆகும். ஈசனுக்கு சேயாக அதாவது மகனாக முருகப்பெருமான் உள்ளதால் அவருக்கு உருவாக்கிய ஆறு சேயாறு என்று அழைக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த ஆற்றை உருவாக்கினார் என்பதற்கும் வரலாறு உள்ளது. ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம் இடப்பாகம் பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்து சென்றார்.

    வழியில் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியை கிழிக்க ஆறு உருவானது. அம்பாள் அதில் நீர் அருந்தி தாகத்தை தணித்தார். அந்த ஆறுதான் சேயாறு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவூடல் நடந்து அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஊடல் துறந்து மகிழ்ச்சி பொங்க இந்த செய்யாற்றுக்கு வந்து தீர்த்தம் ஆடுவதாக சொல்கிறார்கள்.

    செய்யாற்றுக்கு செல்லும்போது ஆற்றை கடக்கக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் மேட்டுப்பாளையம் கிராமம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறும். வழிநெடுக மக்கள் மண்டகப்படி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த தீர்த்தவாரி திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதுபோல அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்த வாரியும் சிறப்பு வாய்ந்தது. மாசிமகம் தினத்தன்று நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்தவாரிக்காக அண்ணாமலையார் கவுதம நதிக்கு புறப்பட்டு செல்வார். கவுதம நதியில் புனித நீராடிய பிறகு அங்கு அவர் தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

    அண்ணாமலையாரே தனது பக்தனுக்காக திதி கொடுப்பதால் இந்த தீர்த்தவாரி அதிக பலன் கொண்டது. இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் கவுதம நதிகரையோரம் திரண்டு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

    அண்ணாமலையார் பங்கேற்கும் தீர்த்தவாரிகளில் கலந்து கொண்டால் வினைகள் தீர்ந்து ஈசனின் திருப்பாதத்தை அடைய முடியும் என்பது நம்பிக்கையாகும். மேலும் தீர்த்தவாரிகளில் பங்கேற்கும் பக்தர்களின் ஆன்மா அண்ணாமலையாரின் கருணை பார்வையால் குளிர்ச்சி பெறுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரியை தவறவிடாதீர்கள்.
    Next Story
    ×