search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொன்னம்பல மேடு
    X
    பொன்னம்பல மேடு

    பேரொளியாய் காட்சி தரும் பொன்னம்பல மேடு ஐயப்பன்

    சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
    சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற் கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருவதாகவும் ஐயப்பப் பக்தர்கள் நம்புகின்றனர்.

    தல வரலாறு :

    பந்தள நாட்டு மன்னரான ராஜசேகரன் வேட்டைக்குச் சென்ற போது, காட்டில் கிடந்த குழந்தையை எடுத்து வந்து ராணியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாமலிருந்த ராணியும் அந்தக் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், ராணிக்கு ஒரு குழந்தை பிறக்க, தன் வயிற்றில் பிறந்த மகனே அடுத்து அரசனாக வேண்டுமென்று நினைத்த அவள், மணிகண்டனை அழிக்கச் சதித் திட்டம் தீட்டினாள்.

    தனக்குத் தீராதத் தலைவலி இருப்பதாகச் சொல்லி, அதனைத் தீர்க்கப் புலிப்பாலைக் கொண்டு வர வேண்டும் என்று அரண்மனை வைத்தியரைச் சொல்ல வைத்தாள். தாயின் நோய் தீர்க்க, தானே செல்வதாக கூறினான் மணிகண்டன். அதைக் கண்ட மன்னர், மணிகண்டனுடன் சில படைவீரர்களை அனுப்புவதாகச் சொன்னார்.

    ஆனால், மணிகண்டன் தனியாகச் சென்றால்தான் புலியைப் பிடிக்க முடியும். கூட்டமாகச் சென்றால் புலிகள் கலைந்து ஓடிவிடும் என்று மறுத்து விட்டான். இதையடுத்து மன்னன் ராஜசேகரன், சிவனுக்குப் படைத்த தேங்காய் மற்றும் பயணத்துக்குத் தேவையான உணவையும் ஒரு துணியில் வைத்துக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்தனுப்பினார். இதுவே பின்னாளில் இருமுடி கட்டாக மாறியது.

    பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து காட்டுக்குள் சென்ற மணிகண்டனை, அவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் சிவகணங்கள் வரவேற்று, அங்கிருந்த மலையுச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைத் தங்க இருக்கையில் அமர வைத்து, மகிஷி எனும் அரக்கியால் தாங்கள் படும் துன்பங்களைச் சொல்லி, அவளை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

    அவர்களது வேண்டுகோளை ஏற்ற மணிகண்டனும், தன்னுடன் தேவர்கள் படையை அழைத்துக் கொண்டு மகிஷியை அழிப்பதற்காகச் சென்றார். இதனையறிந்த மகிஷி, மணிகண்டனை அழிக்க அசுரர் படையுடன் வந்தாள். மணிகண்டனும், மகிஷியும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிட்டனர். மணிகண்டன் அடுத்தடுத்து விடுத்த அம்புகள், மகிஷியின் உடலில் பாய்ந்து அவளைச் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தன. தான் பிரம்மனிடம் பெற்ற வரம் பயனில்லாமல் போகிறதே என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அருகில் வந்த மணிகண்டன் அவளது கொம்புகள் இரண்டையும் பிடித்துச் சுழற்றி வீசி எறிந்தார்.

    மகிஷி அங்கிருந்து தொலைவில் சென்று விழுந்தாள். அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவள் உடல் முழுவதும் சிதைந்து இறந்து போனாள். அவள் இறப்பைக் கொண்டாடி மகிழ்ந்த தேவர்கள், மணிகண்டனைப் பாராட்டிப் பூக்களைத் தூவி வாழ்த்தினர்.

    அப்போது, இறந்து போன அரக்கியின் உடலில்இருந்து வெளியேறிய ஒரு இளம்பெண் உருவம் மணிகண்டனை வணங்கி, தனது பெயர் லீலாவதி என்றும், தான் ஒரு சாபத்தால் அரக்கியாகப் பிறந்ததாகவும், அந்தச் சாபத்தில் இருந்து தன்னை விடுவித்ததற்கு நன்றி தெரிவித்தாள். பின்னர் அவள், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள்.

    மணிகண்டன் அவளைத் திருமணம் செய்ய மறுத்தார். உடனே அவள், அவருக்கு அருகிலாவது இருக்க விரும்புவதாகச் சொல்லி, அதையாவது நிறைவேற்றித் தரும்படி வேண்டினாள். மணிகண்டனும் அதனை ஏற்றுக் கொண்டார். அதன்படி அவள், சபரிமலையில் ஐப்பன் அருகே மாளிகைப்புரத்தம் மனாகக் கோவில் கொண்டாள் என்று வரலாற்றுக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

    காட்டிற்குள் வந்த மணிகண்டனைத் தேவர்கள், முனிவர்கள் போன்றோர் மலையுச்சிக்கு அழைத்துச் சென்று அமர வைத்த இடமே ‘பொன்னம்பல மேடு’ என்று அழைக்கப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் அவதாரமாக சொல்லப்படும் பரசுராமர், ஐயப்பன் கற்சிலை ஒன்றை வடிவமைத்து, வழிபாட்டுக்கான பூஜைகளைச் செய்து பூமிக்குள் புதைத்து வைத்ததாகவும், அதுவே பின்னர் பொன்னம்பல மேடு என்றானதாகவும் சில புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

    பொன்னம்பல மேடு என்றழைக்கப்படும் இவ் விடத்தில், கண்ணுக்குத் தெரியாத பொற்கோவில் ஒன்று இருப்பதாகவும், இங்கு சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, இவ்விடத்திற்குப் பொன்னம்பல மேடு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மலையாள மொழியில் ‘பொன்’ என்றால் ‘தங்கம்’, ‘அம்பலம்’ என்றால் ‘கோவில்’, ‘மேடு’ என்றால் ‘மலை’ என்றும் பொருள் கொள்ளலாம். பொன்னம்பல மேட்டில் கோவிலோ அல்லது சிலையோ இல்லை. சதுர வடிவிலான இரண்டடி உயர மேடை மட்டுமே உள்ளது.

    ஐயப்ப பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள், பொன்னம்பல மேட்டை ‘காந்தமலை’ என்று அழைப்பதுண்டு. ஆனால், பொன்னம்பல மேடு வேறு, காந்தமலை வேறு என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். சிவபெருமானுக்குக் கயிலாய மலை, விஷ்ணுவுக்கு வைகுண்டம் என்றிருப்பது போல் ஐயப்பனுக்குக் ‘காந்தமலை’ இருக்கிறது என்கின்றனர். அந்தக் காந்தமலையின் மறு தோற்றமாகக் கருதப்படுவதே பொன்னம்பல மேடு என்றும் சொல்லப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளில், காட்டுத் தேவதைகள் மற்றும் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான குருத்தி எனும் சடங்கு நடக்கிறது. தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி எனப்படும் நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

    இருமுடி

    மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய போது, அவரது தந்தையான பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், ஈசனுக்கு படைத்த முக்கண் கொண்ட தேங்காயையும், பயணத்தின் போது பசியாறுவதற்கான உணவுப் பொருட்களையும் ஒரு துணியின் இரண்டு பக்கத்திலுமாக வைத்துக் கட்டி கொடுத்து அனுப்பினார். அந்தத் துணியில் கட்டப்பட்டவை இரண்டு பக்கமும் சமமாக இருந்தன. முடிச்சுகள் நன்றாகப் போடப்பட்டிருந்தன. இதைக் கொண்டு தான் ‘இருமுடி’ என்ற சொல் உருவானது. அதன்படி முதன் முதலில் இருமுடி கட்டை சுமந்தவர் ஐயப்பன் என்பது விளங்கும். அவரைப் போலவே பக்தர்களும் இருமுடி கட்டி ஐயப்பனை வேண்டிக்கொண்டால், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வேடன் வடிவிலான ஜோதி :

    வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில், அதிக ஒளிமயமாக இருப்பது ‘ஸிரியஸ்’ எனும் நட்சத்திரக் கூட்டமாகும். இவை பார்ப்பதற்கு வேடனைப் போல் இருக்கும். இந்த நட்சத்திரக் கூட்டத்தை வேத காலத்தில் ‘ம்ருக வியாத’ என்று அழைத்தனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை, ஐயப்பனின் மற்றொரு தோற்றமான வேடன் வடிவிலான ஜோதி என்றே சொல்கின்றனர். கேரளாவில் பல இடங்களில் சாஸ்தாவை “வேட்டைக்கொரு மகன்” எனும் பெயரிலும் வழிபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    காளைக்கட்டி :

    மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் நடைபெற்ற போரைக் காண்பதற்காகச் சிவபெரு மானும், மகாவிஷ்ணுவும் பூலோகத்திற்கு வந்தனர். சிவபெருமான் பூலோகத்துக்கு ரிஷப வாகனத்தில் வந்து இறங்கினார் என்றும், அவர் கொண்டு வந்த ரிஷப வாகனத்தை (காளையை) அங்கே ஓரிடத்தில் கட்டிப் போட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஐயப்பப் பக்தர்கள் அந்த இடத்தினைக் ‘காளைக்கட்டி’ என்ற பெயரில் அழைக்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பொன்னம்பல மேடு. இது பெரியார் தேசியப் பூங்காவின் புலிகள் காப்பகப் பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்ல யாருக்கும் அனுமதிஇல்லை. எனவே, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்களில் பெரும்பான்மையோர், மகர சங்கராந்தி நாளில் பொன்னம்பல மேட்டில் காட்சியளிக்கும் மகர ஜோதியைக் கண்டு வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
    Next Story
    ×