search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் தசரா: கஷ்டங்களை போக்கும் காளி வேடம்
    X

    குலசேகரன்பட்டினம் தசரா: கஷ்டங்களை போக்கும் காளி வேடம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம். காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள். காளி இல்லாத தசராக் குழுக்கள் இருக்காது.

    வரும் 19-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு நடத்தப்படும் சூரசம்ஹாரத்தன்று காளி வேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்ல புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள். இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள் அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

    அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் - இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.  காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாகப் பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது. எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது.

    காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்தபோது, குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது. அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்குடி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.
    Next Story
    ×