search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்ரா பவுர்ணமியும் சித்தர்கள் தரிசனமும்
    X

    சித்ரா பவுர்ணமியும் சித்தர்கள் தரிசனமும்

    மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி விசேஷமும், வித்தியாசமும் கொண்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது சித்ரா பவுர்ணமி தினமாகும்.

    மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி விசேஷமும், வித்தியாசமும் கொண்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது சித்ரா பவுர்ணமி தினமாகும்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது. இன்று காலை 6.58 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்குகிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 6.52 மணி வரை சித்ரா பவுர்ணமி நேரம் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சித்ரா பவுர்ணமிக்கு உரிய உங்களது வழிபாடுகளை திட்டமிட்டு அமைத்து கொள்ளலாம்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்ப வழிபாடுகள் நடைபெறுகிறது. என்றாலும் 4 விதமான வழிபாடுகள் சித்ரா பவுர்ணமிக்கு முக்கியத்துவம் பெறுகிறது. 1. நீர்நிலை அருகே மக்கள் ஒன்றுகூடி நிலா சாப்பாடு சாப்பிடுவது. 2. அம்பிகையை வழிபடுவது. 3. கிரிவலம் செல்வது, 4. சித்தர்களை வழிபடுவது.

    பவுர்ணமியில் சந்திரன் முழுமையான கதிர்களை வெளிப்படுத்துவான். எனவே அன்றைய தினம் நிலா ஒளியில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழர்களிடம் சிறப்பான பழக்கமாக இருந்தது. தற்போது அந்த பழக்கம் மறையும் நிலையில் உள்ளது.

    என்றாலும் வழிபாடுகளில் மாற்றங்கள் இல்லை. பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அம்பிகை இருப்பிடமாக சந்திரனை ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சுட்டிகாட்டி உள்ளது. எனவே பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு விளக்கேற்றி வைத்து பூ போட்ட வஸ்திரம் அணிவித்து வழிபட வேண்டும்.

    இந்த வழிபாடு காரணமாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆன பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிரகதோஷங்கள் நீங்கும்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்பிகைக்கு குங்குமம் அர்ச்சனை செய்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சித்திகளும் கிடைக்கும். தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தானங்கள் செய்தால் நிறைய பலன்களை பெறலாம்.

    அடுத்து சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் முக்கிய அம்சமாக கிரிவலம் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ தலங்களில் கிரிவலம் நடந்தாலும் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவனாக கருதப்படுவதுதான்.

    திருவண்ணாமலையில் நாளை சுமார் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமை கிரிவலத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சென்றால் நோய்கள் தீரும். சிவகதி கிடைக்கும் என்பார்கள்.

    இந்த பலனை பெற வேண்டுமானால் கிரிவலத்தை உரிய விதிமுறைகள்படி செய்ய வேண்டும். கிரிவலம் செல்லும்போது சலசலவென பேசிக் கொண்டே செல்லக்கூடாது. நமது முழு கவனமும் சிவன் மீதே இருக்க வேண்டும். கைகளை வீசிக் கொண்டோ அல்லது ஓடிக்கொண்டோ மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்லக்கூடாது. கர்ப்பிணி பெண் போல நிதானமாக செல்ல வேண்டும்.

    அடிக்கடி மலையை பார்த்து கும்பிட்டபடியே ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி நடக்க வேண்டும். கிரிவல பாதையில் நூற்றுக் கணக்கான சிவனடியார்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு தானங்கள் செய்யுங்கள்.
    Next Story
    ×