search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரக்கற்கள்"

    • விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது.
    • வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

    இதையடுத்து அந்த பகுதியில் வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வதந்தி பரவியது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல் வெளிகளில் காத்துகிடக்கின்றனர்.

    அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஹெட்சன் மற்றும் போலீசார் நேற்று கீழப்பத்தையில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 42), மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார் (57) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் வைரக்கற்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், சுமார் ½ கிலோ வைரக்கற்களையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனச்சரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுசில்குமார், வேல்முருகன் ஆகியோருக்கு வைரக்கற்கள் எப்படி கிடைத்தது? மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதா?, எங்கிருந்தாவது கடத்தி வரப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான சுசில்குமார், முன்னாள் கிராம வனக்குழு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜனகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் தக்காளி பறிக்க சென்ற கூலி பெண் தொழிலாளி ஒருவருக்கும் வைரக்கல் கிடைத்துள்ளது.
    • ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வைரக்கல் கிடைக்கும் கிராமங்களை நோக்கி படையெடுத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் பருவமழை பரவலாக பெய்தது. இந்த நிலையில் ஜோரகுடி பகுதியை சேர்ந்த விவசாயி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் அதிகாலை விவசாய நிலத்தில் தக்காளி பறிப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கு பளபளப்பாக கல் ஒன்று மின்னியது. இதனைக் கண்ட இளம்பெண் அந்த கல்லை எடுத்து வந்து தன் தந்தையிடம் கொடுத்தார்.

    அவர் அந்த கல்லை எடுத்து சென்று நகை வியாபாரியிடம் காட்டியபோது அது 10 கேரட் எடையுள்ள தூய வைரக்கல் என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வைரக்கல்லுக்கு ரூ.30 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொடுத்து வியாபாரி வைரக்கல்லை வாங்கிக் கொண்டார்.

    இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து கிராம மக்கள் தங்களது நிலங்களிலும் வைரக்கல் கிடைக்குமா என தேட தொடங்கினர்.

    இதேபோல் பக்கத்து கிராமங்களான எரகுண்டா, சென்னகிரி, பக்கிரிராளி, கிரிகேட் உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் தங்களது நிலங்களில் வைரக்கல்லை தேடினர்.

    ஜனகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் தக்காளி பறிக்க சென்ற கூலி பெண் தொழிலாளி ஒருவருக்கும் வைரக்கல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

    விவசாயிக்கு கிடைத்த வைரக்கல் ரூ. 34 லட்சத்திற்கும் பெண் தொழிலாளிக்கு கிடைத்த வைரக்கல் ரூ.6 லட்சத்திற்கு விற்பனையானது. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு இதுவரை வைரக்கல் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தத் தகவல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வைரக்கல் கிடைக்கும் கிராமங்களை நோக்கி படையெடுத்தனர். இதேபோல் வைர வியாபாரிகளும் வைரக்கல்லை வாங்க கிராமங்களை நோக்கி வர தொடங்கினர்.

    இதனால் வெளியூர் ஆட்கள் கிராமங்களுக்குள் நுழையாமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் விடிய விடிய காவல் காத்து வருகின்றனர். விவசாய நிலங்களில் வைரக்கல் கிடைப்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே அனந்தபுரம் மாவட்டத்தில் விவசாய நிலத்தை உழுதபோது 2 விவசாயிகளுக்கு வைரக்கல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • வானத்தில் இருந்து வைரக்கற்கள் விவசாய நிலத்தில் விழுந்து மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கிலியை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது நிலத்தில் புதைந்து இருந்த வைரக்கல் ஒன்று மேலே வந்து ஜொலித்தது.

    இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி நகைக் கடைக்கு வைரக் கல்லை எடுத்துச் சென்று விசாரித்தார். அப்போது நகை வியாபாரி ரூ 2 லட்சத்திற்கு விலை போகும் என தெரிவித்தார்.

    அதற்கு விவசாயி ரூ.5 லட்சம் கொடுத்தால் வைரக்கல்லை விற்பனை செய்வதாக தெரிவித்துவிட்டு வைரக்கல்லை வீட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதுகுறித்து மற்றவர்களிடம் விவசாயி தெரிவித்தார். ‌ பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயிகளும் தங்களது நிலத்தை உழுதனர். அப்போது மேலும் 2 விவசாயிகளுக்கு வைரக்கல் கிடைத்தது.

    விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் நிலம் வைத்திருந்த அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை உழுது வருகின்றனர்.

    கடந்த வாரம் கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது வானத்தில் இருந்து வைரக்கற்கள் விவசாய நிலத்தில் விழுந்து மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×