search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர் படம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தான் தயாரிக்கும் சாக்லேட் கவர்களில் வித்தியாசமாக வேட்பாளர்களின் படங்களை பிரிண்ட் செய்து வினியோகிக்கலாம் என நினைத்தார்.
    • பல மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    தேர்தலில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பிரசாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவது வழக்கம். பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்காளர்களின் கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம்.

    அது மக்களை கவரும் விதத்திலும் அமைந்துவிடும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வெளியிட்டுள்ளார். இது கேரள மாநில வேட்பாளர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் காரசேரி பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா கதீஜா. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஹோம் மேட் சாக்லேட் கடையை தொடங்கினார். தான் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கான கவர்களையும் அவரே தயாரித்து பேக் செய்து விற்பனை செய்கிறார்.

    தற்போது கேரளாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள ஆஷிகா கதீஜா திட்டமிட்டார். தான் தயாரிக்கும் சாக்லேட் கவர்களில் வித்தியாசமாக வேட்பாளர்களின் படங்களை பிரிண்ட் செய்து வினியோகிக்கலாம் என நினைத்தார்.

    அதற்கு யாரை நாடுவது என்று யோசித்தபோது, கேரள மாநிலத்தில் வடகரை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஷாபி பரம்பில் தொகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்ததை அறிந்தார்.

    தனது திட்டத்துக்கு அவரை பயன்படுத்த ஆஷிகா கதீஜா முடிவு செய்தார். அதுதொடர்பாக ஷாபி பரம்பில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் இது வித்தியாசமாக இருப்பதை அறிந்து, அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து ஷாபி பரம்பில் படத்தை பிரிண்ட் செய்த கவர்களில் தான் தயாரிக்கும் ஹோம் மேட் சாக்லேட்களை வைத்து கொடுத்தார். அதனை பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் ஏராளமான சாக்லேட்டுகளை ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் மந்திரியும், தற்போதைய மட்டனூர் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான சைலஜாவும், தனது படங்கள் அடங்கிய சாக்லேட்டுகள் தயாரிக்க ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்தார். இந்த வித்தியாசமான முறை கேரள மாநில வேட்பாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ஷாபி பரம்பில் மற்றும் சைலஜா ஆகியோரின் படங்கள் அடங்கிய சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்கும் அதுபோன்று தயாரித்து கொடுக்குமாறு ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    அவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

    ×