search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தக்குழாய்"

    • சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
    • குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.

    மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.

    உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.

    அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

    இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

    ×