search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி திருவிழா"

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் நடைபெற்று அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை. 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.

    தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    இதற்கிடையே மாசித்திருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கள்கிழமை) தேரோட்டம் நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது.

    அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம் அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி காட்சி கொடுக்கிறார்
    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதினம் மண்டபத்துக்கு வந்த சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் மேலக்கோவில் சென்றடைந்தனர். பின்னர் இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    மாசித்திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்றும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, சூரிய காவடி, பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் 8.45 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார்.

    அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    8-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெந்நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    10-ம் திருநாளான வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 4-ந்தேதி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
    • தேரோட்டம் 6-ந்தேதி நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. இரவில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

    அப்போது கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • 5-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவத்திருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    அதன்படி. இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடைபெற்றது.

    காலை 6.45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார். 7.30 மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வந்து மாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

    வருகிற 5-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார், சுவாமி பொலிந்துநின்றபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    11-ந்தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    • இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 8-ந்தேதி கதாகாலஷேபம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவுபெறும் வகையில் 10 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது. மாநாடு நடத்துவது குறித்து எழுந்த பிரச்சினைக்குபின் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் 86-வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

    விழாவில் அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடக்கிறது. பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாநாட்டு பந்தலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார். விழாவை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில் மாதா அமிர்தானந்தமயி மட மாவட்ட பொறுப்பாளர் நிலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஆசிரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் மற்றும் குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்குகின்றனர். குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், பத்மனாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்துகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணிஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தளவாய் சுந்தரம், இந்திய உணவு கழக இயக்குனர் தெய்வ பிரகாஷ், கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

    மாலை 6.30 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும் நடக்கிறது.

    6-ந் தேதி காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், 10 மணிக்கு பெரிய புராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை 8 மணிக்கு அகவல் பாராயணம், பிற்பகல் 3.30 மணிக்கு தேவார இன்னிசை, 4.30 மணிக்கு பாலப்பள்ளம் குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6 மணிக்கு கர்நாடக இன்னிசை, இரவு 9.30 மணிக்கு கதகளியும், 8-ந் தேதி இரவு 8 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் மகதி குழுவினரின் கர்நாடகா மற்றும் பக்தி இன்னிசை, 11 மணிக்கு கதாகாலஷேபமும் நடைபெறும்.

    9-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 4 மணிக்கு இசை சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 10-ந் தேதி காலை 9 மணிக்கு பஜனை போட்டி, மாலை 3.30 மணிக்கு திருமுறை பக்தி பண்ணிசை, 5.30 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 11 மணிக்கு ஈஷா யோகா நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜையும் நடக்கிறது.

    11-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொற்பொழிவு போட்டி, மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர கூட்டம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மாதர் மாநாடு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகமும், 12-ந் தேதி மாலை 4 மணிக்கு வாழும்கலை மைய சத்சங்கம், மாலை 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அய்யாவழி கலை நிகழ்ச்சி, 10.30 மணிக்கு பக்தி இன்னிசையும், 13-ந் தேதி காலை 9 மணிக்கு சிவபுராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் 500 மதிப்பெண்ணும் அதற்கு மேலும், 10-ம் வகுப்பில் 400-ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற இந்து மாணவர்களையும், சொற்பொழிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்குதல், இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல், நள்ளிரவு 12.30 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆதரவுடன் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.
    • சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    3-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவிலை சேர்ந்தனர்.

    மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
    • இன்று சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் காட்சி அளிக்கின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் பகலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோவில் சேர்ந்தார்கள்.

    இன்று (திங்கள்கிழமை) இரவு சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
    • தேரோட்டம் மார்ச் 6-ம்தேதி நடக்கிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 27-ந்தேதி மாலை 6.30மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    4-ம் திருவிழா 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

    5-ம் திருவிழா வருகிற 1-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும் அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    6-ம் திருவிழா 2-ந்தேதி இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 3-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலாவும், 11.30மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 5-ந்தேதி இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ந்தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வருதல், இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார், ஏரல் சேர்மன் சாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், பழக்கடை திருப்பதி திருவாடுதுறை ஆதினம் திருச்சிற்றம்பழம் தம்பிரான் சுவாமிகள், இந்து முன்னணி மாநில மாநில துணைதலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழா நாளை தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • மார்ச் 6-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் திருவிழாவான நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்த ருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான மார்ச் 1-ந் தேதி(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் மேல கோவிலில் இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும் அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணி அளவில் சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல், அங்கு சுவாமிக்கு அபிசேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 4-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    9-ந் திருவிழாவான 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் நெல்லை நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ந் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 7-ந்தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடக்கிறது.
    • தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

    பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு லிங்க வடிவில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் கம்பம் பழனி வையாபுரிகுள பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. பின்பு 3.50 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கம்பத்துக்கு பால், மஞ்சள்நீர் ஆகியவற்றை ஊற்றி வழிபட்டனர். விழாவில், வருகிற 28-ந்தேதி கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி மாலை 6.45 மணிக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 9-ந்தேதி இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கரந்தமலையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன்பிறகு மஞ்சள் ஆடை அணிந்து அங்கிருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சந்தனகருப்பு கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ண குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தகுடங்கள் மூலம் கோவில் சன்னதி முன்பு தீர்த்தத்தை தெளித்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். திருவிழாவையொட்டி நேற்று இரவு அம்மன்குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் சன்னதி முன்பு ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    திருவிழாவில் வருகிற 24, 28-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவார். மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது.
    • கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அடுத்த நாள் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. பின்னர் அவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. அதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு ஊன்றப்பட்டது. இதையடுத்து பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். அதன் பிறகு கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.

    அதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். இதில் விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்கச் செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், இணைச் செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

    மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மனின் மின்தேர் வீதி உலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

    இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×